“ஒரிஜினல் எப்போதும் ஒரிஜினல்தான்!” - தெலங்கானா அரசியலில் குடும்பப் போர் தீவிரம்!
தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, தனது தந்தையின் கட்சியான பி.ஆர்.எஸ் (BRS) உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, இன்று முறைப்படி புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
தற்போது கே.சி.ஆர் நடத்தி வரும் பாரத ராஷ்டிர சமிதி (BRS) கட்சியின் பழைய பெயரான 'தெலங்கானா ராஷ்டிர சமிதி' (TRS) என்பதையே சற்று மாற்றியமைத்து, 'தெலங்கானா ராஷ்டிரிய சேனா' என்று தனது புதிய கட்சிக்குப் பெயரிட்டுள்ளார் கவிதா.
"கே.சி.ஆர் இப்போது பழைய போராட்ட வீரராக இல்லை; அவர் சில தனி நபர்களின் பிடியில் சிக்கியுள்ளார்" என்று கவிதா தனது கட்சித் தொடக்க விழாவில் பகிரங்கமாகத் தந்தையைக் குற்றம் சாட்டியுள்ளார். கவிதாவின் இந்தப் புதிய கட்சி அறிவிப்பிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பி.ஆர்.எஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் காரசாரமான மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
பி.ஆர்.எஸ் கட்சியினர், "பெயரைத் திருடினால் மட்டும் கொள்கைகள் வந்துவிடாது, ஒரிஜினல் எப்போதுமே ஒரிஜினல்தான்" என்ற வாசகத்துடன் கே.சி.ஆரின் புகைப்படத்தைப் பகிர்ந்து கவிதாவின் புதிய கட்சியை விமர்சித்து வருகின்றனர். கவிதா கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்குப் பின்னால் காலேஸ்வரம் திட்ட முறைகேடுகள் குறித்து அவர் எழுப்பிய கேள்விகளே காரணம் எனக் கவிதா கூறினாலும், பி.ஆர்.எஸ் தலைமை இதனை மறுத்துள்ளது.
தெலங்கானா இயக்கத்தின் அடையாளமாக இருந்த 'TRS' என்ற சுருக்கப் பெயரை கவிதா கையிலெடுத்திருப்பது, பி.ஆர்.எஸ் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸை எதிர்ப்பதே தனது முதல் லட்சியம் எனக் கவிதா கூறினாலும், நிஜப் போட்டி பி.ஆர்.எஸ் மற்றும் கவிதாவின் புதிய கட்சிக்கு இடையே தான் இருக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.