'இயக்குநர் இமயம்' பாரதிராஜா கடந்து வந்த பாதை.. பெற்ற விருதுகள் | தமிழ் சினிமாவின் பாதையை மாற்றியவர்!

 

தமிழ் திரையுலகை ஸ்டுடியோக்களின் நான்கு சுவர்களுக்குள் இருந்து, பச்சைப் பசேல் என்ற வயல்வெளிகளுக்கும், மண் வாசனை வீசும் கிராமங்களுக்கும் அழைத்துச் சென்ற மாபெரும் புரட்சி கலைஞர் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா இன்று நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவர் தமிழ் சினிமாவில் பதித்துச் சென்ற தடம் என்றென்றும் அழியாதது. கதாநாயகன் என்றால் அழகாக, கோட்-சூட் அணிந்துதான் வர வேண்டும் என்ற இலக்கணத்தை உடைத்து, கிராமத்து நாயகனுக்குக் கோவணம் கட்டி, வாயில் வெற்றிலைச் சாற்றுடன் 'சப்பாணி'யாக உலவவிட்ட அந்த மகாகலைஞனின் வாழ்க்கை என்றென்றும் தமிழ் திரையுலகில் வலம் வந்துக் கொண்டிருக்கும். 

சின்னசாமி 'பாரதிராஜா' ஆன கதை:

தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் பெரிய மாயத்தேவர் - மீனாட்சி அம்மாள் (என்கிற கருத்தம்மாள்) தம்பதியருக்கு 1941 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்ட இயற்பெயர் 'சின்னசாமி'. மூன்று சகோதரிகள், மூன்று சகோதரர்கள் எனப் பெரிய குடும்பத்தில் வளர்ந்த சின்னசாமிக்கு, சிறுவயது முதலே நாடகங்கள் பார்ப்பதிலும் நடிப்பதிலும் ஆர்வம் இருந்தது.

வாழ்க்கைக்காக அவருக்கு அரசுத் துறையில் 'சுகாதார ஆய்வாளர்' வேலை கிடைத்தது. ஊர் ஊராகச் சென்று மக்களின் சுகாதார நிலை மற்றும் நோய்கள் குறித்து ரிப்போர்ட் தயாரிப்பதுதான் அவரது பணி. ஆனால், அந்த வேலைதான் அவரது கலைப் பயணத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டது.

பண்ணைபுரத்து நட்பு வளம்:

வேலையின் நிமித்தமாக அவர் ஒருமுறை பண்ணைபுரம் சென்றபோது, அங்குத் தங்களது அபார இசைத் திறமையால் வலம் வந்த இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர் ஆகியோரைச் சந்திக்கும் அற்புதம் நிகழ்ந்தது. கலை ஆர்வம் அனைவரையும் அசுர வேகத்தில் நண்பர்களாக்கியது. கம்யூனிஸ்ட் மேடைகளில் பாவலர் வரதராஜனுடன் இணைந்து பாடி வந்த இளையராஜா குழுவினர், பாரதிராஜா இயக்கிய 'ஊர் சிரிக்கிறது', 'சும்மா ஒரு கதை' போன்ற புதுமையான நாடகங்களுக்கு மதுரையில் பின்னணி இசை வாசித்தனர்.

இவர்களின் திறமையைக் கண்ட கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் பி.சங்கரய்யாவின் அண்ணன் மகன் 'அன்னக்கிளி' செல்வராஜ், இவர்களுடன் நெருங்கிய நண்பரானார். "நாம் ஏன் சினிமாவுக்குச் செல்லக் கூடாது?" என்ற விவாதம் அங்குதான் தொடங்கியது.

சென்னை நோக்கிய பயணம்

முதலில் அன்னக்கிளி செல்வராஜும், அவரைத் தொடர்ந்து பாரதிராஜாவும் சென்னை கோடம்பாக்கத்தில் கால் பதித்தனர். ஆனால், சினிமா வாய்ப்புகள் அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. சாப்பாட்டிற்கே திண்டாடும் நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர் ஆகியோரும் சென்னை வந்தனர். சங்கிலிமுருகனின் நாடகங்களுக்கு இசையமைத்துக் கொண்டே, இசைக்கச்சேரிகளும் நடத்தினர். அங்கே பாட வந்த எஸ்பிபி (S.P. பாலசுப்பிரமணியம்) இவர்களது அசுர நட்பு வட்டத்தில் இணைந்தார்.

பின்னர், பிரபல இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் இளையராஜா உதவியாளராகச் சேர்ந்தார். இளையராஜாவின் வேண்டுகோளின்படி, ஜி.கே.வெங்கடேஷ் தான் கங்கை அமரனைக் கவிஞர் கண்ணதாசனிடமும், பாரதிராஜாவை கன்னடத் திரையுலகின் அசுர இயக்குநர் புட்டண்ணா கனகலிடமும் உதவியாளர்களாகச் சேர்த்துவிட்டார். புட்டண்ணா கனகலிடம் 'இருளும் ஒளியும்' படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த பாரதிராஜா, தொடர்ந்து தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி.யின் தயாரிப்பில் 'தலைபிரசவம்', 'அதிர்ஷ்டம் அழைக்கிறது' ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றித் தனது திறமையை வளர்த்துக் கொண்டார்.

'சொந்த வீடு' டிராப்... 'மயிலு' கொடுத்த லைஃப்!

பாரதிராஜாவின் திறமையை மெச்சிய கே.ஆர்.ஜி, அவருக்கு 'சொந்த வீடு' என்ற படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார். முத்துராமன் - ஜெயலலிதா ஜோடி, வி.குமார் இசை என முடிவானது. ஆனால், படப்பிடிப்பு தொடங்கும் முன்பே ஜெயலலிதா விலகியதால் அந்தப் படம் கைவிடப்பட்டது.

மனம் தளராத பாரதிராஜா, கே.ஆர்.ஜி.யின் அலுவலகத்திற்கு வந்த பைனான்சியர் எஸ்.ஏ.ராஜ்கண்ணுவிடம் தான் வைத்திருந்த 'மயிலு' என்ற கிராமத்துக் கதையைக் கூறினார். கதை பிடித்துப் போகவே, அதற்கு '16 வயதினிலே' எனப் பெயரிட்டு கமல், ரஜினி, ஸ்ரீதேவி ஆகிய அசுரக் கூட்டணியுடன் களமிறங்கினர். அதற்குள் இவர்களின் நண்பர் அன்னக்கிளி செல்வராஜ் மூலம் பஞ்சு அருணாசலத்தின் அறிமுகம் கிடைத்து, 'அன்னக்கிளி' படம் மூலம் இளையராஜா இசையமைப்பாளராகிப் புகழ்பெற்றிருந்தார். உடனே, தனது முதல் படத்திற்கு நண்பன் இளையராஜாவையே இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்தார் பாரதிராஜா.

'16 வயதினிலே' படைத்த சரித்திரம்:

1977 செப்டம்பர் 5ல் வெளியான '16 வயதினிலே' தமிழ்த் திரையுலகின் போக்கையே அசுரத்தனமாக மாற்றி அமைத்தது. அதுவரை கண்டிராத மாபெரும் வசூல் சாதனை படைத்ததோடு, முதல் படத்திலேயே சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசின் விருதையும் பாரதிராஜா தட்டிச் சென்றனர்.

அதன்பின் சுதாகர் - ராதிகாவை அறிமுகம் செய்து 'கிழக்கே போகும் ரயில்', கமல் - ஸ்ரீதேவியுடன் சைக்கோ த்ரில்லர் படமான 'சிகப்பு ரோஜாக்கள்' என அசுர வேகத்தில் ஹிட் கொடுத்தார். தனது உதவியாளர் கே.பாக்யராஜை 'புதிய வார்ப்புகள்' படம் மூலம் ஹீரோவாக்கினார். 'நிறம் மாறாத பூக்கள்' படத்தில் மற்றொரு உதவியாளர் கே.விஜயனுக்கு இவரே டப்பிங் பேசினார். நிவாஸ் இயக்கத்தில் வெளியான 'கல்லுக்குள் ஈரம்' படம் மூலம் பாரதிராஜா நடிகராகவும் அவதாரமெடுத்தார்.

சர்வதேச மேடையும், தேசிய விருதுகளும்:

மணிவண்ணன் கதையில் 'நிழல்கள்' தோல்வியடைந்தாலும், மீண்டும் அவர் கதையிலேயே கார்த்திக் - ராதாவை அறிமுகம் செய்து 'அலைகள் ஓய்வதில்லை' காவியத்தைப் படைத்து மீண்டார். திக்டிக்டிக், மண்வாசனை, புதுமைப்பெண், ஒரு கைதியின் டைரி, கடலோர கவிதைகள், வேதம் புதிது, கொடி பறக்குது, புது நெல்லு புது நாத்து, கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா, அந்திமந்தாரை, கடல் பூக்கள் எனத் தமிழ், தெலுங்கு, இந்தி என மொத்தம் 44 திரைப்படங்களை இயக்கி அசுர சாதனை படைத்தார். இதில் 12 படங்களுக்கு அவரே கதையும் எழுதியுள்ளார்.

இவரது 'முதல் மரியாதை' காவியம் 1986ல் புகழ்பெற்ற தாஷ்கண்ட் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. தன் தாய் கருத்தம்மாவின் பெயரில் தான் இயக்கிய 'கருத்தம்மா' படத்திற்குத் தேசிய விருது கிடைத்தபோது, தனது தாயையே டெல்லி மேடைக்கு அழைத்துச் சென்று இந்திய ஜனாதிபதியிடம் விருது வாங்க வைத்தது இந்திய சினிமாவே நெகிழ்ந்த வரலாற்றுத் தருணம். 2004 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு நாட்டின் உயரிய 'பத்மஸ்ரீ' விருதை வழங்கி கௌரவித்தது. இதுதவிர 6 தேசிய விருதுகள், பிலிம்பேர் விருதுகள், தமிழக அரசின் மாநில விருதுகள், நந்தி விருது மற்றும் சத்யபாமா பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம் என விருதுகளை அசுரத்தனமாக அறுவடை செய்தவர் பாரதிராஜா.

பாசமிகு குடும்பமும் சோகமும்:

திரையுலகில் தனக்கு வாழ்வளித்த தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி.யின் முழுப் பொறுப்பில், தனது சொந்த அக்கா மகள் சந்திர லீலாவை பாரதிராஜா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மனோஜ் என்ற மகனும், ஜனனி என்ற மகளும் பிறந்தனர். தனது மகன் மனோஜை 'தாஜ்மஹால்' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மகன் மனோஜ், கடந்த ஆண்டு (2025) மார்ச் 25 அன்று எதிர்பாராத விதமாக மாரடைப்பால் காலமானது பாரதிராஜாவின் பிற்கால வாழ்வில் பேரிடியாக அமைந்தது. மனோஜின் மனைவி நடிகை நந்தனா மற்றும் பேத்திகள் ஆர்த்திகா, மதிவதனி ஆகியோர் உள்ளனர். மகள் ஜனனி மலேசியாவில் வசித்து வருகிறார்.

இயக்குநராக மட்டுமன்றி ஆயுத எழுத்து, குரங்கு பொம்மை, நம்ம வீட்டுப் பிள்ளை, மாநாடு, திருச்சிற்றம்பலம் என 20-க்கும் மேற்பட்ட படங்களில் அசுர குணச்சித்திர நடிகராகவும் முத்திரை பதித்த பாரதிராஜா, வயது முதிர்வு காரணமாக இன்று இயற்கை எய்தியுள்ளார்.