அமைதி ஒப்பந்தம் முறிந்தது.. ஹார்முஸ் நீரிணையில் சிங்கப்பூர் கப்பல் மீது ஈரான் ராணுவம் தாக்குதல்!

 

உலக நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான தற்காலிக அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி, ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களின் போக்குவரத்து வழக்கம் போல் திரும்பிய சில நாட்களிலேயே, அங்கு மீண்டும் போர் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. ஹார்முஸ் நீரிணையைகடக்க முயன்ற சிங்கப்பூர் நாட்டு வணிகக் கப்பல் ஒன்றின் மீது ஈரான் ராணுவம் திடீரென நடத்தியுள்ள துப்பாக்கிச் சூடு மற்றும் ஏவுகணைத் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓமான் நாட்டின் தாஹித் துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற, சிங்கப்பூர் நாட்டு கொடி ஏந்திய 'எவர் லவ்லி' என்ற பிரம்மாண்ட வணிகக் கப்பலே இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. தாஹித் துறைமுகத்தில் இருந்து சுமார் 7.5 கடல் மைல் தொலைவில் தென்கிழக்கு நடுக்கடலில் கப்பல் பயணித்துக் கொண்டிருந்த போது, ஈரான் ராணுவத்தின் அதிவேகக் காவற்படைக் கப்பல்கள் அதனைச் சூழ்ந்து கொண்டன.

எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி, 'எவர் லவ்லி' கப்பலின் வலது புறத்தைக் குறி வைத்து ஈரான் ராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தியது. இந்தத் திடீர் தாக்குதலின் வேகம் காரணமாகக் கப்பலின் முதன்மை மேல்தளம் மற்றும் கட்டுப்பாட்டு அறையின் சில பகுதிகள் பலத்த சேதமடைந்தன.

இருப்பினும், கப்பலுக்குள் இருந்த பாதுகாப்பு எச்சரிக்கை விதிகளின்படி ஊழியர்கள் அனைவரும் உடனடியாகப் பாதுகாப்பான கீழ் தள அறைகளுக்குச் சென்றதால், இந்த பயங்கரத் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என முதற்கட்ட சர்வதேச கடல்சார் பாதுகாப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களில் பெரும்பகுதி இந்த ஹார்முஸ் நீரிணை வழியாகவே கடக்க வேண்டியுள்ளது. அமெரிக்காவுடனான தற்காலிக ஒப்பந்தத்திற்குப் பிறகு, உலக நாடுகள் நிம்மதியடைந்த நிலையில் ஈரான் இந்த அத்துமீறலை மீண்டும் கையில் எடுத்துள்ளது.

சர்வதேச கடல் எல்லையில் சிங்கப்பூர் கப்பல் மீது ஈரான் நடத்தியுள்ள இந்தத் தாக்குதலால் கச்சா எண்ணெய் ஏற்றி வரும் கப்பல்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரக்கூடும் என்ற அச்சம் உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.