“இந்த கண்றாவிக்கா மக்கள் உங்களுக்கு வாக்களித்தனர்” - மு.க. ஸ்டாலின் ஆவேசம்!

 

அதிமுகவைச் சேர்ந்த 3 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை அவசர அவசரமாக ராஜினாமா செய்துவிட்டு, ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த சம்பவம், தமிழக அரசியல் களத்தில் "குதிரை பேரம்" என்ற புதிய புயலைக் கிளப்பியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாகத் தவெக அரசை அடியோடு விமர்சித்து, திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மிகக் கடுமையான கண்டனப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தேர்தல் பிரச்சாரங்களின் போது தவெக தன்னை ஒரு மாற்று அரசியல் சக்தியாகவும், தூய்மையான கொள்கைகளைக் கொண்ட கட்சியாகவும் முன்னிறுத்தியதைச் சுட்டிக்காட்டி மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். "அரசியலில் தங்களைத் 'தூயசக்தி' என்று கூறிக்கொண்டு, மேடைக்கு மேடை சுயதம்பட்டம் அடித்துக் கொண்டவர்கள், இன்று தங்களின் அதிகாரப் பசிக்காக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களை விலைபேசி இழுத்து, தங்களை ஒரு 'துயரசக்தி’ என்று மக்கள் மத்தியில் அப்பட்டமாக அம்பலப்படுத்திக் கொண்டுள்ளார்கள்."

கூட்டணி ஆட்சியில் இருந்து தப்பித்து, தனித்து அறுதிப் பெரும்பான்மை பெற வேண்டும் என்பதற்காகத் தவெக அரங்கேற்றி வரும் இந்த அதிரடி ராஜினாமா நாடகங்களை அவர் சாடியுள்ளார்: "தேர்தலில் மக்கள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களித்துச் சட்டமன்றத்திற்கு அனுப்பினால், சுயநலத்திற்காகப் பதவிகளைத் தூக்கியெறிந்துவிட்டு ஆளுங்கட்சிக்குத் தாவுவதும், அதற்கு ஆளுங்கட்சியே சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதும் ஜனநாயகப் படுகொலை.

தமிழக சட்டமன்ற வரலாற்றில் என்றுமே இல்லாத இந்த அவலமான கண்றாவிக் காட்சிகளைத் திரையில் பார்ப்பதற்காகவா மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள்?" என மு.க.ஸ்டாலின் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்ற 15 நாட்களுக்குள்ளாகவே, எதிர்க்கட்சி உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்துத் தவெக இடைத்தேர்தலுக்குத் தயாராகி வரும் சூழலில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் இந்த நேரடித் தாக்குதல் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையேயான அரசியல் மோதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.