கதறும் மக்கள்... ஸ்பெயினில் வெப்ப அலைக்கு 1,028 பேர் பலி!
ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஜூன் மாதத்தில் வீசிய கடுமையான வெப்ப அலை காரணமாக, ஸ்பெயினில் மட்டும் 1,028 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுப் பொதுச் சுகாதார ஆராய்ச்சி நிறுவனமான கார்லோஸ் III ஹெல்த் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.
இது கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பதிவான 407 உயிரிழப்புகளை விட இரண்டு மடங்கு அதிகமாகும். மேலும், ஸ்பெயினில் வெப்ப அலைக்கான தரவுகள் சேகரிக்கத் தொடங்கப்பட்ட 2015 ஆம் ஆண்டிற்குப் பிறகு, ஜூன் மாதத்தில் பதிவான மிக அதிகபட்ச உயிரிழப்பு இதுவே ஆகும்.
ஸ்பெயினின் தேசிய வானிலை ஆய்வு முகமையான 'ஏமெட்' வெளியிட்டுள்ள விபரங்களின்படி, இந்த ஆண்டின் முதல் 6 மாதங்கள் (ஜனவரி முதல் ஜூன் வரை) ஸ்பெயினின் வரலாற்றுப் பதிவுகளிலேயே மிக அதிக வெப்பம் நிலவிய காலப் பகுதியாக மாறியுள்ளது. வழக்கமான சராசரி வெப்பநிலையை விட இந்த ஆண்டு 1.6 டிகிரி செல்சிஸ் கூடுதலாகப் பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தின் சராசரி வெப்பநிலை வழக்கமான அளவை விட 3.2 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 99 சதவீதத்திற்கும் அதிகமானோர் (1,022 பேர்) 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் ஆவர். குறிப்பாகக் கேட்டலோனியா மற்றும் பாஸ்க் போன்ற நாட்டின் வடக்கு மற்றும் மத்திய தரைக்கடல் ஒட்டிய பகுதிகளில் இதன் பாதிப்பு அதிகமாக இருந்துள்ளது.
ஸ்பெயின் மட்டுமன்றி பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட பிற ஐரோப்பிய நாடுகளிலும் ஜூன் மாதத்தில் இதுவரை இல்லாத புதிய வெப்பநிலை உச்சங்கள் பதிவாகியுள்ளன. பிரான்சில் இரவு நேர வெப்பநிலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்திருந்தது.
உலக வானிலை பண்புக்கூறு விஞ்ஞானிகளின் கருத்துப்படி, மனிதர்களின் செயல்பாடுகளால் ஏற்படும் பருவநிலை மாற்றம் மற்றும் பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வு இல்லாவிட்டால், ஜூன் மாதத்தில் இத்தகைய கடுமையான வெப்ப அலை ஏற்படுவது சாத்தியமற்ற ஒன்று என்று எச்சரித்துள்ளனர்.
தொழிற்சாலைக் கழிவுகள், புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு ஆகியவற்றால் ஏற்படும் புவி வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் மாசு குறித்து உலகளாவிய பருவநிலை மாநாடுகளில் இந்தியா போன்ற நாடுகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. எனினும், வளர்ந்த நாடுகள் கார்பன் உமிழ்வைக் குறைப்பதில் போதிய உடன்பாடுகளையும் தீர்வுகளையும் எட்டாததே உலகளவில் இத்தகைய இயற்கை பேரிடர்கள் தொடரக் காரணமாக அமைகிறது.