கதறும் மக்கள்... மரண ஓலம்... கொலம்பியா நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 130யைக் கடந்த துயரம் - அவசர நிலை பிரகடனம்!

 

தென்அமெரிக்க நாடான கொலம்பியாவில் ரிக்டர் அளவில் 7.4 ஆகப் பதிவான பயங்கர நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

கொலம்பியாவின் சொக்கோ மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மார் பகுதிக்கு கிழக்கே 5 கி.மீ தொலைவில், பூமிக்கு அடியில் சுமார் 107 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

நிலநடுக்கத்தின் அதிர்வால் கலி, பெரைரா, மேனிசேலஸ்  உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் மற்றும் வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் கொலம்பியத் தலைநகர் போகோட்டா மட்டுமின்றி, அண்டை நாடுகளான வெனிசுலா, ஈக்வடார் மற்றும் பனாமாவிலும் பலமாக உணரப்பட்டன.

இடிபாடுகளுக்குள் நூற்றுக்கணக்கானோர் சிக்கியுள்ளதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்புக் குழுவினர் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். நிலநடுக்கத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, கொலம்பியா அரசு நாட்டில் தேசிய அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த அனைத்து அரசுக் கட்டமைப்புகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.