சீரழியும் மக்கள்... போதையில் தாய், தந்தையை அடித்துக் கொன்ற மகன்!

 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான மகன், மது வாங்கப் பணம் தராத ஆத்திரத்தில் தனது தாய் மற்றும் தந்தையை இரும்புக் கம்பியால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் அருகே உள்ள ஏழுக்கம் வயல் பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்திரன் (55) மற்றும் அவரது மனைவி வல்சம்மா (50). இவர்களது மகன் ஜோதிஷ் (43) தீவிர மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர். வழக்கம்போல் சம்பவத்தன்றும் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வந்த ஜோதிஷ், தந்தையிடம் மீண்டும் குடிப்பதற்குப் பணம் கேட்டுள்ளார். சந்திரன் பணம் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜோதிஷ், வீட்டில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்துத் தாய், தந்தை இருவரையும் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

மகனின் கொடூரத் தாக்குதலில் பலத்த காயமடைந்த சந்திரனும் வல்சம்மாவும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்துத் தகவலறிந்து வந்த நெடுங்கண்டம் காவல்துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெற்றோரைக் கொடூரமாக அடித்துக் கொன்ற மகன் ஜோதிஷைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து கொலை வழக்குப் பதிவுடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.