அலறியடித்த மக்கள்... குஜராத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் 3.4 ஆகப் பதிவு!
குஜராத் மாநிலத்தின் தெற்குப் பகுதியில் உள்ள நவ்சாரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. தூக்கத்தில் இருந்த மக்கள் நில அதிர்வை உணர்ந்து வீதிக்கு ஓடி வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
காலை சரியாக 5:27 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 3.4 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாகக் காந்திநகரில் உள்ள நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவ்சாரி மாவட்டத்தின் வன்ஸ்தா நகருக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 22 கி.மீ தொலைவில், நிலப்பரப்பிற்கு அடியில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. அதிகாலையில் மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது நிலம் அதிரத் தொடங்கியதால், நவ்சாரி மற்றும் வன்ஸ்தா பகுதி மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
இந்த நிலநடுக்கம் லேசான அளவிலேயே இருந்ததால், கட்டடங்கள் இடிந்ததாகவோ அல்லது உயிர் சேதங்கள் ஏற்பட்டதாகவோ இதுவரை எந்தத் தகவலும் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏதேனும் ஏற்படுகிறதா என்பதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
லேசான நிலநடுக்கம் என்றாலும், பழைய கட்டடங்களில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு உள்ளூர் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. பதற்றமடைய வேண்டாம் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.