“மக்களின் தோழர் நல்லகண்ணு..” - பிறப்பு முதல் பொதுவுடைமை வரை.. கடந்து வந்த பாதை!
தமிழக அரசியலின் "மனசாட்சி" என்று போற்றப்படும் ஐயா நல்லகண்ணு அவர்களின் 101 கால மகாத்மிய வாழ்வு, போராட்டங்களாலும் தியாகங்களாலும் செதுக்கப்பட்டது. அவரது நூற்றாண்டு கால பயணத்தின் முக்கிய மைல்கற்களைப் பார்க்கலாம்.
1925-ம் ஆண்டு டிசம்பர் 26-ல் தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டத்தில் பிறந்த நல்லகண்ணு, பள்ளிப் பருவத்திலேயே தேச விடுதலைப் போரால் ஈர்க்கப்பட்டார். உணவுக் கமிட்டிக் கூட்டத்தில் ஒரு தலித் உறுப்பினரைச் சமமாக அமர வைத்து, மிராசுதார்களுக்கு எதிராக இளமையிலேயே சமத்துவக் குரல் எழுப்பினார். தனது இந்தி ஆசிரியர் பலவேசம் செட்டியார் மூலம் மார்க்சிய நூல்களை வாசித்து, 1943-ல் முறைப்படி கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.
சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது, நல்லகண்ணு அவர்கள் மிகக்கடுமையான சித்திரவதைகளை அனுபவித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரால் சிகரெட் நெருப்பால் அவரது அடர்த்தியான மீசை எரிக்கப்பட்டது. அந்த வலியின் அடையாளமாகவே அவர் வாழ்நாள் முழுவதும் மீசை வைத்துக்கொள்வதைத் தவிர்த்தார்.
1952-ல் 'நெல்லை சதி வழக்கில்' இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சுமார் 7 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு 1956-ல் விடுதலை ஆனார். 1966-ல் இவர் மேற்கொண்ட தீவிர உண்ணாவிரதப் போராட்டமே இன்று கடனா நதி அணை கம்பீரமாக நிற்பதற்குக் காரணமாக அமைந்தது.
1995-ல் தென் மாவட்டக் கலவரங்களின்போது தனது மாமனார் படுகொலை செய்யப்பட்ட நிலையிலும், பழிவாங்கக் கூடாது எனத் தடுத்து அமைதிப் பாதயாத்திரை மேற்கொண்டார். 2010-ல் தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளைக்கு எதிராகத் தாமே நீதிமன்றத்தில் வாதாடி, மணல் அள்ளத் தடையைப் பெற்றுத் தந்தார்.
2005ல், அவரது 80வது பிறந்தநாள் விழாவின் போது, கட்சி வசூலித்துக் கொடுத்த ₹1 கோடி மற்றும் காரை கட்சிக்கே திருப்பிக் கொடுத்தார். அதன் பின்னர் 2022ல் தகைசால் தமிழர் விருதும், அரசு வழங்கிய ₹10 லட்சம் காசோலையுடன் தனது சொந்தப் பணம் ₹5,000 சேர்த்து முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கினார். அரசு வழங்கிய வீட்டை மறுத்து, நீண்ட காலம் வாடகை வீட்டிலேயே வசித்து வந்தார்.
சுமார் 13 ஆண்டுகள் சி.பி.ஐ மாநிலச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். இன்று பிப்ரவரி 25ம் தேதி தனது 101-வது வயதில் இயற்கை எய்தினார். தனது உடலை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குத் தானமாக வழங்கியுள்ளார்.