தமிழகத்தில் தொடரும் அவலம்... ரூ.1.20 கோடி மதிப்பிலான வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!

 

ராமநாதபுரம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கடலோரப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.1.20 கோடி மதிப்பிலான வலி நிவாரணி மாத்திரைகளைக் 'கியூ' பிரிவு காவல்துறையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை பகுதியில், கடற்கரைக்கு அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் 5 பெரிய பார்சல்கள் கேட்பாரற்றுக் கிடப்பதாகக் 'கியூ' பிரிவு போலீசாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அந்த பார்சல்களைச் சோதனையிட்டதில், அதில் சுமார் 2 லட்சம் போதை தரும் வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் சந்தை மதிப்பு ரூ.1.20 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பைக் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனிடையே, நேற்று முன்தினம் நள்ளிரவு புதுமடம் கடற்கரைப் பகுதியில் கடல் வழியாக இலங்கைக்குக் கடத்துவதற்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 531 கிலோ சுக்கு மற்றும் மஞ்சள் பொடி பாக்கெட்டுகளையும் கடலோரப் பாதுகாப்புக் குழுமப் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவங்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சர்வதேசக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.