கோவிலில் பயங்கர திருட்டு.. சிசிடிவி கேமரா முன் நக்கல் செய்து காட்டிய மர்ம நபர்கள் கைது..!!

 

கோவிலில் திருடியதோடு சிசிடிவி கேமரா முன் நக்கல் செய்து காட்டிய மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து திருடியதோடு கேமராவின் முன்பாக முகத்தை காட்டி  நக்கல் செய்து காட்டியதோடு சிசிடிவி கேமராவையும் உடைத்து விட்டு தப்பி ஓடினர். அப்போது அவர்களை பிடிக்க அப்பகுதி மக்கள் துரத்தி சென்றனர். அப்போது மர்ம நபர்கள் அரிவாளை காட்டி மிரட்டி தப்பி ஓடினர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய ஒரு பள்ளி மாணவர் உள்ளிட்ட 17 வயதுடைய இரண்டு சிறார்களையும், முத்து(19) என்ற இளைஞரையும் அறந்தாங்கி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து கைது செய்துள்ளனர். மேலும் திருட்டிற்குத் தொடர்புடைய மற்றும் திருடர்கள் பயன்படுத்திய பல்சர் பைக், ஒரு செல்போன், 4100 ரூபாய் ரொக்கப்பணம், கொரடு, கட்டிங்க் ப்ளேடு உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஆசை என்கிற நபரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருட்டுத் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் துரிதமாக செயல்பட்ட போலீசார் 36 மணி நேரத்திற்குள்ளாக திருடர்களை கைது செய்துள்ள சம்பவத்தால் கீரமங்கலம் பகுதி மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். போலீசாரின் துரித நடவடிக்கைக்கு சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.