கதறிய பெற்றோர்... கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 2 சிறுவர்கள் பலி!

 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த வெப்படை பகுதியில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வெப்படை பகுதியில் இயங்கி வரும் தனியார் நூற்பாலையில், வடமாநிலத்தைச் சேர்ந்த மனோஜ்குமார் (33) மற்றும் பிரதோஷ் (31) ஆகியோர் தொழிலாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஆலை வளாகத்திலேயே தங்கி வேலை செய்து வந்தனர். மனோஜ்குமாருக்கு லோகன்குமார் (4 வயது) என்ற மகனும், பிரதோஷிற்கு ஹரிசங்கர் (3 வயது) என்ற மகனும் இருந்தனர்.

நேற்று மாலை, சிறுவர்கள் இருவரும் தங்கள் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். நீண்ட நேரமாகியும் சிறுவர்கள் வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தனர். அப்போது, நூற்பாலை வளாகத்தில் இருந்த தரைமட்ட கழிவுநீர் தொட்டிக்குள் சிறுவர்கள் இருவரும் விழுந்து கிடப்பதைக் கண்டு அலறினர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்ட போதும், சிறுவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரிய வந்தது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெப்படை போலீசார், சிறுவர்களின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகப் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தரைமட்ட கழிவுநீர் தொட்டி முறையாக மூடப்படாமல் இருந்ததே இந்த விபத்திற்குக் காரணமா என்பது குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.