டாஸ்மாக் பாருக்கு எதிராகப் போராடிய சமூக ஆர்வலரை சிக்க வைக்க போலீசாரே கஞ்சா வைத்து வழக்குப் போட்ட கொடூரம்!

 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே டாஸ்மாக் பாருக்கு எதிராகப் போராடி வரும் சமூக ஆர்வலரை கஞ்சா வழக்கில் சிக்க வைப்பதற்காக, அவரது கடை அருகே கஞ்சா பொட்டலத்தை வைத்து மஃப்டி போலீசார் நாடகமாடிய சம்பவம் சிசிடிவி காட்சிகளால் அம்பலமாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள திருக்காளப்பட்டியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பாருக்கு எதிராக, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை ஒன்றுதிரட்டி ராஜ்குமார் என்ற சமூக ஆர்வலர் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட தீவிரச் சாலை மறியல் போராட்டத்தைத் தொடர்ந்து, 10 நாட்களில் அந்த டாஸ்மாக் பாரை அப்புறப்படுத்துவதாக அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்திருந்தனர்.

இந்நிலையில் போராட்டத்தில் முன்னின்று செயல்பட்ட ராஜ்குமாரை பழிவாங்கும் நோக்கில், அவரைப் போலீசில் சிக்க வைக்கப் பெரிய அளவிலான சதித்திட்டம் தீட்டப்பட்டது. மளிகை கடை நடத்தி வரும் ராஜ்குமாரின் கடைக்கு நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள், பொருட்கள் வாங்குவது போல் நடித்து, கடையின் வெளியே உள்ள கால்வாய்ப் பகுதியில் ஒரு பொட்டலத்தை வைத்து விட்டுச் சென்றனர்.

அவர்கள் சென்ற 10 நிமிடங்களிலேயே காரில் 'மஃப்டியில்' வந்த இரு நபர்கள், தங்களை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் எனக் கூறிக் கொண்டு ராஜ்குமாரின் கடையில் திடீர் சோதனை நடத்தினர். பின்னர், திட்டமிட்டபடி அந்த கால்வாய்ப் பகுதிக்குச் சென்று பொட்டலத்தை எடுத்து, "நீங்கள் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்கிறீர்களா?" எனக் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதனை மறுத்த ராஜ்குமார், "எனக்கும் இந்த பொட்டலத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. என் கடையில் சிசிடிவி கேமரா உள்ளது; வாருங்கள் அதில் யார் வைத்தார்கள் என்று பார்த்து விடலாம்" எனக் கூறியுள்ளார். சிசிடிவி கேமரா என்ற வார்த்தையைக் கேட்டதுமே அதிர்ச்சியடைந்த அந்த மஃப்டி போலீசார், "இதை பெரிதுபடுத்த வேண்டாம். நீங்கள் டாஸ்மாக் பாருக்கு எதிராகப் போராடுவதால் யாரோ காழ்ப்புணர்ச்சியில் இப்படிச் செய்துள்ளனர், நாங்களே பார்த்துக் கொள்கிறோம்" எனக் கூறிவிட்டு, விக்னேஷ் என்ற பெயரிலான தொலைபேசி எண்ணைக் கொடுத்துவிட்டு அவசர அவசரமாக அங்கிருந்து நழுவிச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து ராஜ்குமார் தனது கடை சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது, 2 நபர்கள் பைக்கில் வந்து கஞ்சா பொட்டலத்தை வைப்பதும், அடுத்த சில நிமிடங்களில் மஃப்டி போலீசார் வந்து சோதனையிடுவது போல் நாடகமாடியதும் தெளிவாகப் பதிவாகியிருந்தது.

இக்காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. டாஸ்மாக் பார் உரிமையாளருடன் சேர்ந்து காவல்துறையினரும் இந்தச் சதியில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள ராஜ்குமார், இதுகுறித்துச் சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.