தமிழினத்தின் பெருமை"... மாவீரன் அழகுமுத்துகோன் பிறந்தநாள்; முதல்வர் விஜய் வீர வணக்கம்!
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக முதன்முதலில் போர்க்குரல் எழுப்பிய மாவீரர்களில் ஒருவரான மன்னர் அழகுமுத்துகோனின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் விஜய் தனது அஞ்சலியைச் செலுத்தி வீர வணக்கம் புரிந்துள்ளார்.
"ஆங்கிலேயர்களின் அடிமை ஆதிக்கத்திற்கு எதிராகத் தனது தாய்மண்ணின் விடுதலைக்காக முதன்முதலில் குரல் எழுப்பிய மாவீரன் அழகுமுத்துகோன், அடிமை வாழ்வைவிட சுதந்திர வாழ்வே ஆகச் சிறந்தது எனத் தன் சொல்லாலும் செயலாலும் உலகிற்கு உணர்த்தியவர். நாட்டின் விடுதலைக்காகத் தனது இன்னுயிரையே தியாகம் செய்த அந்த மாவீரனின் தியாகமும், தேசப்பற்றும் தமிழினத்தின் ஆகப்பெரும் பெருமையாக நம் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்."
மன்னர் அழகுமுத்துகோனின் பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசின் சார்பில் அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதேபோல், அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்திலும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மாவீரன் அழகுமுத்துகோனின் பிறந்தநாள் விழாவையொட்டி சட்டம்-ஒழுங்குப் பாதிப்புகள் ஏதும் ஏற்படாமல் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சென்னை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பாதுகாப்புப் பணிகள் உச்சகட்டமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சென்னையில் அவரது சிலை அமைந்துள்ள எழும்பூர் பகுதியில் வாகன நெரிசல் மற்றும் தேவையற்ற கூட்ட நெரிசல்கள் ஏற்படுவதைத் தவிர்க்க, சென்னை மாநகரப் போக்குவரத்துப் பிரிவு போலீசார் மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீசார் இணைந்து முக்கியச் சாலைகளில் போக்குவரத்தைச் சீரமைத்து மாற்றுப் பாதைகளை அமைத்துள்ளனர். தூத்துக்குடி கட்டாலங்குளம் நினைவிடப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரள்வதால், அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க மாவட்டச் சட்டம்-ஒழுங்கு போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் இணைந்து தற்காலிகச் சோதனைச் சாவடிகளை அமைத்துக் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விழா நடைபெறும் பகுதிகள் முழுவதும் கூடுதல் போலீசார் ரோந்துப் பணிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.