undefined

பிரதமரின் வருகை... திருப்பரங்குன்றம் முதல் பொதுக்கூட்ட மைதானம் வரை ஐந்தடுக்கு பாதுகாப்பு!

 

தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை மதுரைக்கு வருகை தர உள்ளார். இதையொட்டி மதுரை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மதுரை மண்டேலா நகர் சுற்றுச்சாலை பகுதியில் நாளை மாலை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக சுமார் 120 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட மேடை மற்றும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மதுரை வருகையின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். மேலும், மதுரை விமான நிலையத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பிரதமரின் வருகையையொட்டி, அவர் பயணிக்கும் பாதைகள் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்கள் அனைத்தும் போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக, விமான நிலையம் மற்றும் திருப்பரங்குன்றம் கோவில் பகுதிகளில் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டுத் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மாவட்ட எல்லைக்குள் நாளை டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க விடக் கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் விடுத்துள்ள எச்சரிக்கையில்: "தடையை மீறி யாரேனும் டிரோன்களைப் பறக்க விட்டால், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.