கல்லூரி மாணவியை ஏமாற்றிப் பலாத்காரம் செய்த பேராசிரியர்; திருமணம் செய்துக் கொள்வதாக நாடகம்!
தனக்குத் திருமணமாகி குழந்தைகள் இருப்பதை ரகசியமாக மறைத்து, 17 வயது கல்லூரி மாணவியை ஆசை வார்த்தை கூறிப் பலாத்காரம் செய்த தனியார் கல்லூரிப் பேராசிரியர் ஒருவரைக் கர்நாடக மாநிலப் போலிசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம் பல்லாரியில் உள்ள ஒரு பிரபல தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தவர் ரவிகிரண் (42). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். ரவிகிரண் அதே கல்லூரியில் படித்து வரும் 17 வயது இளம் மாணவி ஒருவரிடம், தனக்குத் திருமணமே ஆகவில்லை என்று பொய் கூறி, பாசமாகப் பழகுவது போலக் காதல் நாடகமாடியுள்ளார். மேலும், அந்த மாணவியையே முறைப்படி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி, பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளார்.
இந்நிலையில், பேராசிரியர் ரவிகிரணுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கும் அதிர்ச்சி உண்மை அந்த மாணவிக்குத் தெரிய வந்தது. இதனால் மனமுடைந்த மாணவி, பேராசிரியர் ரவிகிரணிடம் சென்று நியாயம் கேட்டுத் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தனது உண்மையான முகத்தைக் காட்டிய ரவிகிரண், "எனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது உண்மைதான். உன்னுடன் நான் பழகியது வெறும் உல்லாசத்திற்காக மட்டும்தான்" என்று கூறி மாணவியை மிரட்டியுள்ளார்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி, வீட்டில் அழுது கொண்டே தனது பெற்றோரிடம் நேர்ந்த கொடுமைகள் அனைத்தையும் விவரித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், உடனடியாகப் பல்லாரி மகளிர் காவல் நிலையத்தில் பேராசிரியர் ரவிகிரண் மீது முறைப்படிப் புகார் அளித்தனர்.
பாதிக்கப்பட்டவர் 18 வயதிற்குட்பட்ட மைனர் பெண் (17 வயது) என்பதால், புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர், பேராசிரியர் ரவிகிரண் மீது போக்சோ சட்டம் மற்றும் ஏமாற்றுதல், மிரட்டல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக முயன்ற ரவிகிரணை போலிசார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் கர்நாடகக் கல்வி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.