தீர்க்கதரிசி... தமிழக அரசியலை 36 வருடங்களுக்கு முன்பே கணித்த ‘துக்ளக்’ சோ - அப்படியே நடக்குதே!

 

தமிழக அரசியல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் பெரும் திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், மறைந்த மூத்த அரசியல் விமர்சகரும், பிரபல நடிகரும், 'துக்ளக்' இதழின் ஆசிரியருமான சோ ராமசாமி, 36 ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய அரசியல் சூழலைத் துல்லியமாகக் கணித்துக் கூறியுள்ள தகவல் சமூக வலைதளங்களில் தற்போது காட்டுத்தீயாய் விவாதிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் 74 ஆண்டுகால அரசியல் வரலாற்றில், கடந்த 59 ஆண்டுகளாகத் திமுக மற்றும் அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சி வந்தன. இந்த ஆதிக்கத்திற்கு அண்மையில் நடைபெற்ற 17-வது சட்டமன்றத் தேர்தல் முற்றுப்புள்ளி வைத்துள்ளது:

கட்சி தொடங்கிய வெறும் இரண்டரை ஆண்டுகளிலேயே, தான் சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே மாபெரும் வெற்றியைப் பெற்று தவெக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் எந்த ஒரு தனித்த கட்சிக்கும் முழுமையான பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக கூட்டணி ஆட்சிக்கான முயற்சிகளை மேற்கொண்டு ஆட்சி அமைத்தது.

தேர்தல் முடிவுகளுக்குப் பின், தமிழக அரசியலில் இரு துருவங்களாக, பரம எதிரிகளாகக் கருதப்பட்ட திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களது பல வருட பகைமையை மறந்து, தவெகவை வீழ்த்துக் கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைக்கத் திரைமறைவில் முயன்றதாக தகவல்கள் வெளியாகின.

இந்தத் திரைமறைவுப் பேச்சுவார்த்தை மற்றும் கூட்டணி முயற்சிகளைத் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  கட்சியும், அதிமுகவின் மூத்த தலைவருமான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் பொதுவெளியில் உறுதிப்படுத்தியுள்ளனர். இது ஒட்டுமொத்த தமிழகப் பொதுமக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

"திமுகவும் அதிமுகவும் இணைவதாவது? அது எப்படி சாத்தியம்?" என்று பொதுமக்கள் இன்று வரை யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், 36 ஆண்டுகளுக்கு முன்பே (1990-ம் ஆண்டு) 'துக்ளக்' இதழில் சோ எழுதிய வாசகர் கேள்வி-பதில் பகுதி தற்போது வைரலாகி வருகிறது.

வாசகரின் கேள்வி (1990): "திமுகவும், அதிமுகவும் எப்போதாவது கூட்டணி சேருவார்களா?"

சோ ராமசாமியின் பதில்: "நிச்சயமாக வரும் காலத்தில் இரண்டு கட்சிகளுமே தனித்துப் போட்டியிட்டு ஜெயிக்க முடியாத ஒரு (புதிய) அரசியல் சூழல் தமிழ்நாட்டில் உருவாகும். அப்போது தங்களின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள இரு கட்சிகளும் கூட்டணி அமைப்பார்கள்."

தற்போதைய 17-வது சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, இரண்டு கட்சிகளும் அதிகாரப்பூர்வமாகக் கூட்டணி அமைக்காவிட்டாலும், சோ 36 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிட்டதைப் போன்றே இரு கட்சிகளாலும் தனித்து வெல்ல முடியாத சூழலும், வேறு வழியின்றி இரு எதிரி துருவங்களும் கைகோர்க்கத் துணிந்த சூழலும் நிஜமாகியுள்ளது. இதன் மூலம், சோவின் அரசியல் பார்வையும், அவரது தீர்க்கதரிசனமும் எவ்வளவு வலிமையானது என்பதைத் தமிழக மக்கள் வியப்புடன் பேசி வருகின்றனர்.