பொதுமக்கள் அதிர்ச்சி... ரூ.800லிருந்து ரூ.6,000 ஆக உயர்ந்த சொத்து வரி... அடுத்தடுத்து புகார்கள்!

 


சென்னையில் கடந்த முறை ₹800 அளவில் செலுத்தப்பட்ட சொத்து வரி, இந்த முறை ₹6,000 வரை உயர்த்தப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி இதற்கு அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது.

சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுவான சொத்து வரி விகிதம் எதுவும் உயர்த்தப்படவில்லை என மாநகராட்சி ஆணையர் தெளிவுபடுத்தியுள்ளார். இது பொதுவான வரி உயர்வு அல்ல; கட்டிடத்தின் பரப்பளவை தவறாகக் குறிப்பிட்டிருந்த அல்லது மறுசீரமைப்பு/கூடுதல் கட்டுமானம் மேற்கொண்ட கட்டிடங்களைக் கண்டறிந்து மேற்கொள்ளப்பட்ட மறுமதிப்பீடு நடவடிக்கை மட்டுமே ஆகும்.

செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் ஜி.ஐ.எஸ் தொழில்நுட்பம் மூலம் கட்டிடங்களின் உண்மையான பரப்பளவு அளவிடப்பட்டு, விடுபட்ட அல்லது தவறாகக் கணக்கிடப்பட்ட கட்டடங்களுக்கு மட்டுமே திருத்தப்பட்ட வரி நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த மறுமதிப்பீட்டு நோட்டீஸில் ஏதேனும் முரண்பாடுகள் அல்லது தவறுகள் இருப்பதாகக் கருதினால், நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மண்டலத் துணை ஆணையரிடம் ஆட்சேபனை அல்லது மேல்முறையீட்டு மனு அளிக்கலாம். சமர்ப்பிக்கப்படும் மனுக்கள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்து 30 நாட்களுக்குள் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், அளவீட்டில் சந்தேகமிருப்பவர்கள் மண்டல அலுவலகங்களை அணுகி மேல்முறையீடு செய்யலாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.