உலகம் முழுவதும் இதயங்களை வென்ற 'பஞ்ச்-குன்' குரங்கு... பிரம்மாண்டமாக நடைபெற்ற முதல் பிறந்தநாள் விழா!
ஜப்பான் நாட்டின் இச்சிகாவா நகர உயிரியல் பூங்காவில் வசித்து வரும் 'பஞ்ச்' என்ற சிறிய குரங்கு தனது 1-வது பிறந்தநாளை விமர்சையாகக் கொண்டாடியுள்ளது. பிறந்த சில நாட்களிலேயே தாயால் கைவிடப்பட்ட இந்தக் குட்டிப் பஞ்ச் குரங்கை உயிரியல் பூங்காப் பராமரிப்பாளர்கள் மிக அன்போடு கவனித்துப் பராமரித்து வந்தனர். அதன் தனிமையைப் போக்கவும் பற்றும் திறனை வளர்க்கவும் பொம்மை குரங்கு ஒன்றை அதனிடம் பராமரிப்பாளர்கள் வழங்கி ஆறுதல் அளித்தனர். அந்தப் பொம்மையைக் கட்டியணைத்தபடி பஞ்ச் இருக்கும் சுவாரசியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் வைரலாகின.
உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் நெஞ்சங்களைக் கவர்ந்த பஞ்ச் குரங்கின் 1-வது பிறந்தநாளை முன்னிட்டுப் பூங்காவில் சிறப்பு விழாக்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. பஞ்ச் குரங்கிற்கு வாழ்த்து தெரிவிக்கப் பல நாடுகளில் இருந்தும் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட வண்ணமயமான வாழ்த்து அட்டைகள் பூங்காவிற்கு வந்தடைந்துள்ளன. வாழ்த்து அட்டைகள் அனைத்தையும் பூங்கா நிர்வாகத்தினர் தனிக் கண்காட்சி அமைத்துப் பொதுமக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளனர். மேலும் பஞ்ச் குரங்கைப் பார்ப்பதற்காக ஜப்பான் மட்டுமின்றிப் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் பூங்காவிற்குத் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
தொடக்கத்தில் மற்ற குரங்குகளுடன் சேர முடியாமல் தவித்து வந்த பஞ்ச், படிப்படியாகத் தனது பயத்தைப் போக்கிக் கொண்டு மற்ற குரங்குகளுடன் இயல்பாகப் பழகத் தொடங்கியது. இப்போது 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் வாழும் கூட்டத்தில் பஞ்ச் எவ்வித அச்சத்துமின்றி மற்ற குரங்குகளுடன் இணைந்து உற்சாகமாக விளையாடி வருகிறது. பொம்மையின் துணையின்றித் தனியாக வாழப் பழகிக் கொண்ட பஞ்ச் குரங்கின் தன்னம்பிக்கை மற்றும் வளர்ச்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.