இசையுலகின் முடிசூடா ராணி... பாடகியாக மட்டுமல்லாமல் பாடலாசிரியர், இசையமைப்பாளராகவும் ஜானகி அம்மாவின் பன்முகத்திறமை!
தென்னிந்தியத் திரைத்துறையில் 'கானக்குயில்' என்று அன்போடு அழைக்கப்படும் எஸ். ஜானகி அம்மா, 80-களின் தலைமுறை தொடங்கி இன்றைய 2k கிட்ஸ் வரை அனைவராலும் உருகி ரசிக்கப்படும் ஒரு காந்தக் குரலுக்குச் சொந்தக்காரர். அவர் ஒரு சிறந்த பின்னணிப் பாடகி என்பது உலகறிந்த விஷயம் என்றாலும், அவர் பல பாடல்களைத் தானே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார் என்ற பன்முகத்திறமை பலரும் அறியாத ஒரு சுவாரசியமான பக்கமாகும்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்லா என்ற ஊரில் 1938-ல் பிறந்த ஜானகி, தனது 3 வயது முதல் 10 வயது வரை முறையான இசை கற்றார். 9 வயதிலேயே தனது முதல் மேடை நிகழ்ச்சியில் பாடினார்.
1956-ல் அகில இந்திய வானொலி நடத்திய பாட்டுப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றதைத் தொடர்ந்து சென்னை வந்தவர், ஏவி.எம். ஸ்டுடியோவில் ஒப்பந்தப் பாடகியாக இணைந்தார். 1957-ல் 'விதியின் விளையாட்டு' என்ற படத்தில் பாடத் தொடங்கினாலும், கண்டசாலாவுடன் இணைந்து பாடிய 'எம்எல்ஏ' என்ற தெலுங்குப் படத்தின் "நீயாசா அடியார்" என்ற பாடலே முதலில் வெளியானது.
மொழி எல்லைகளைத் தாண்டிய குரல்: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி எனத் தென்னிந்திய மொழிகள் மட்டுமன்றி கொங்கணி, துளு, சவுராஷ்டிரம், வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம், ஜப்பான், ஜெர்மனி மற்றும் சீன மொழி எனப் பல மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை எல்லைகளைத் தகர்த்த பெருமை இவருக்கு உண்டு.
ஜானகி அம்மா வெறும் பாடகியாக மட்டும் நின்றுவிடாமல், தனது இசைப் பயணத்தில் பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும் முத்திரை பதித்துள்ளார். தெலுங்கில் வெளியான 'மௌனப் போராட்டம்' என்ற திரைப்படத்திற்கு ஜானகி அம்மா முழுமையாக இசையமைப்பாளராகப் பணியாற்றி, தனது அசாத்திய இசைத் திறமையை நிரூபித்தார்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான பல பக்திப் பாடல்களை அவரே சொந்தமாக எழுதி, அதற்குத் தாளம் அமைத்து, இசையமைத்துப் பாடியுள்ளார். இசைஞானி இளையராஜாவின் முதல் படமான 'அன்னக்கிளி' திரைப்படத்தில் ஜானகி பாடிய "மச்சானா பாத்திங்களா" பாடல் பட்டிதொட்டியெங்கும் எதிரொலித்தது. அங்கிருந்து தொடங்கிய 'இளையராஜா - ஜானகி' கூட்டணி தென்னிந்தியச் சினிமாவையே பல தசாப்தங்களாக ஆட்டிப்படைத்தது.
தமிழ் திரையிசையின் காதல் ஜோடிப் பாடல்களுக்கு இலக்கணம் வகுத்தது ‘இளையராஜா - எஸ்.பி.பாலசுப்ரமணியம் - எஸ்.ஜானகி’ கூட்டணிதான். மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் ஆரம்பகால இசை வாழ்க்கையில் ஜானகி அம்மா மிகப்பெரிய தூணாக விளங்கினார்.
குரல் ஜாலம்: பாடலின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, நடிக்கும் நடிகைகளுக்கு ஏற்றவாறு தனது குரலை மாற்றிப் பாடுவதிலும், மழலைக் குரலில் பாடுவதிலும் இவர் வல்லவர். 'கொஞ்சும் சலங்கை' படத்தில் இவர் பாடிய "சிங்கார வேலனே தேவா" பாடல், இன்றளவும் பலராலும் பாட முடியாத மிகக் கடினமான சங்கதிகளைக் கொண்ட ஒரு மாஸ்டர்பீஸ் ஆகும். மேலும், ரஹ்மான் இசையில் "நெஞ்சினிலே" மற்றும் அனிருத் இசையில் "அம்மா அம்மா" ஆகிய பாடல்கள் இவரின் குரல் ஆளுமைக்குச் சான்றுகள்.
இசைத் துறைக்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்காக 4 தேசிய விருதுகள், 11 கேரள மாநில அரசு விருதுகள், 10 நந்தி விருதுகள், 6 தமிழக அரசு திரைப்பட விருதுகள் மற்றும் 1 ஒடிசா மாநில விருதை வென்றுள்ளார். 1992-ல் இவருக்குச் சிங்களத்தில் 'ஞான கான சரஸ்வதி' என்ற பட்டம் வழங்கப்பட்டது.
2013-ஆம் ஆண்டு இந்திய அரசு ஜானகி அம்மாவிற்கு 'பத்ம பூஷன்' விருதை அறிவித்தது. ஆனால், 55 ஆண்டுகாலத் தட்டாத இசைப் பணிக்கு இந்த விருது மிகவும் தாமதமாக வழங்கப்பட்டுள்ளது என்று கூறி, அந்த விருதினை கம்பீரமாக நிராகரித்தார் ஜானகி அம்மா.