சட்டம் ஒழுங்கு குறித்த கேள்வி.. பதிலளிக்காத முதல்வர் ஜோசப் விஜய்

 

தமிழகச் சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது, மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலைமை மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்த எதிர்க்கட்சிகளின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் நேரடியாகப் பதிலளிக்கவில்லை எனக் கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் அதிருப்தி தெரிவித்துள்ளனர். வழக்கமாகச் சட்டம் ஒழுங்கு விவகாரங்களை முதலமைச்சரே கையாளுவது மரபாக இருக்கும் நிலையில், இன்று அமைச்சர்கள் மட்டுமே அதற்குப் பதிலளித்ததாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

சட்டமன்றக் கூட்டத்தொடரின் இன்றைய அமர்வில், தமிழகத்தில் அண்மைக்காலமாக நடந்து வரும் சில குற்றச்சம்பவங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை புகார்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தன. அப்போது, இந்த விவகாரங்களில் தவெக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன என்றும், குற்றவாளிகள் மீது எடுக்கப்பட்டுள்ள கடுமையான நடவடிக்கைகள் குறித்தும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் காரசாரமாகக் கேள்விகளை எழுப்பினர்.

இந்த விவாதங்களின் போது அவையிலிருந்த முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாகப் பதிலளிக்காமல் மௌனம் காத்தார். முதலமைச்சருக்குப் பதிலாக, தவெக அமைச்சரவையில் உள்ள முக்கிய அமைச்சர்களான ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் எழுந்து சட்டம் ஒழுங்கு விவகாரம் குறித்து அரசின் சார்பில் விரிவான விளக்கங்களை அளித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு வழங்கியுள்ள பாதுகாப்பு, குற்றவாளிகள் மீது பாய்ந்துள்ள சட்டப்பிரிவுகள் மற்றும் காவல்துறையினர் எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவர்கள் இருவரும் புள்ளிவிவரங்களுடன் அவையில் வாதிட்டனர். மேலும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தவெக அரசு தண்டிப்பதில் சமரசம் செய்யாது என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.

இருப்பினும், அமைச்சர்களின் இந்த விளக்கத்தால் திருப்தியடையாத எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சட்டம் ஒழுங்கு மற்றும் உள்துறை போன்ற முக்கியத் துறைகளைத் தன் வசம் வைத்துள்ள முதலமைச்சரே இதுபோன்ற உணர்வுபூர்வமான மற்றும் முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிப்பது தான்  ஜனநாயக மரபு என்று கூறினர். முதலமைச்சர் விஜய் இதற்குத் தானே முன்வந்து பதிலளிக்கத் தவறிவிட்டார் எனக் குற்றம் சாட்டி, அவையிலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் சட்டமன்றத்தில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.