தம்பதியிடம் செயின் பறிக்க முயன்ற கொள்ளையர்கள் - வேகத்தடையில் பைக் கவிழ்ந்ததால் மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பைக்கில் சென்ற தம்பதியிடம் தங்கச் செயினைப் பறிக்க முயன்றபோது, சாலையில் இருந்த வேகத்தடையில் பைக் நிலைதடுமாறி விழுந்ததில் கொள்ளையர்களில் ஒருவரைப் பொதுமக்கள் துணிச்சலாக மடக்கிப் பிடித்துள்ளனர்.
அஜ்மீர் சிவில் லைன்ஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியரை வழிமறித்த இரு முகமூடி கொள்ளையர்கள், கழுத்தில் அணிந்திருந்த செயினைப் பறிக்க முயன்றனர்.
தம்பதியரின் செயினைப் பறித்த வேகத்தில் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாகச் சாலையில் இருந்த வேகத்தடையில் அவர்களின் பைக் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் தம்பதியரும், கொள்ளையர்களும் சரிந்து விழுந்தனர்.
கீழே விழுந்த நிலையிலும் அங்கிருந்து தப்பிக்க முயன்ற கொள்ளையர்களை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மிகுந்த துணிச்சலுடன் சுற்றிவளைத்தனர். இதில் ஒரு கொள்ளையனை மக்கள் கையும் களவுமாக மடக்கிப் பிடித்தனர். மற்றொருவன் அங்கிருந்து தப்பியோடிவிட்டான்.
பொதுமக்களால் பிடிக்கப்பட்ட கொள்ளையனைச் சிவில் லைன்ஸ் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். தலைமறைவாகியுள்ள மற்றொரு குற்றவாளியைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.