கொளுத்தும் வெயில் ... முகம், கைகள் கருமையை நீக்க இதோ எளிய வீட்டு வைத்தியங்கள்!
கோடைக்காலத்தில் நீண்ட நேரம் வெயிலில் சுற்றும்போது சூரியனின் புற ஊதாக் கதிர்வீச்சுத் தாக்கத்தால், சருமத்தில் மெலனின் உற்பத்தி அதிகமாகி முகம் மற்றும் கைகள் சட்டென்று கருமையடைந்து விடுகின்றன. ஆரம்பத்திலேயே இதைக் கவனிக்காமல் விட்டால், அது நீக்க முடியாத பிடிவாதமான கருமையாக மாறிவிடும். இதற்காக விலை உயர்ந்த அழகுக் கலை நிலையங்களுக்குச் சென்று பணம் செலவழிக்கத் தேவையில்லை; நம் வீட்டிலிருக்கும் சில இயற்கைப் பொருட்களே இந்த விடாப்பிடியான கருமையை மிக வேகமாக நீக்க போதுமானதாகும்.
முதலில், புதிய கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்பட்ட இயற்கையான ஜெல்லை முகம் மற்றும் கைகளில் தடிமனான லேயராகத் தடவி இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட வேண்டும். கற்றாழையில் உள்ள ‘அலாயின்’ என்ற கூட்டுப்பொருள் சருமத்தின் மெலனின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி, வெயிலால் ஏற்படும் எரிச்சலைக் குறைத்துப் பழைய நிறத்தை மீட்டெடுக்க உதவும். இதேபோல், இரண்டு தேக்கரண்டி தயிருடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுவதன் மூலமும், மசித்த தக்காளிச் சாற்றை நேரடியாகத் தடவுவதன் மூலமும் நல்ல பலன் கிடைக்கும்.
மேலும், இரண்டு மேஜைக்கரண்டி கடலை மாவுடன் தேவையான அளவு காய்ச்சாத பால் சேர்த்துத் தயாரித்த கெட்டியான கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்துக் கழுவலாம். ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாற்றுடன் சம அளவு சுத்தமான தேன் கலந்து கருமையான இடங்களில் தேய்ப்பதும் இயற்கையான ப்ளீச்சிங் போலச் செயல்படும். எலுமிச்சைச் சாறு கலந்த கலவைகளைத் தடவிய உடனே வெயிலில் செல்வதைத் தவிர்த்து மாலை நேரத்தில் பயன்படுத்துவது சிறந்ததுடன், விடாப்பிடியான கருமை முழுமையாக மறையக் குறைந்தபட்சம் 2 முதல் 3 வாரங்கள் தொடர்ந்து இதனைப் பயன்படுத்த வேண்டும்.