சுட்டெரிக்கும் வெயில்.. பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளி போகிறதா? பெற்றோர்கள் எதிர்பார்ப்பு!

 

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஜூன் 4-ஆம் தேதி திறக்கப்படவுள்ள பள்ளிகளின் தேதியை மேலும் தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எதிர்பார்ப்பும் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது.

2026-2027ஆம் கல்வியாண்டிற்கான பள்ளிகள் திறப்பு, முன்னதாக ஜூன் 1-ஆம் தேதி (4 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு) எனத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் நிலவி வந்த கடுமையான வெப்பம், கத்தரி வெயில் தாக்கம் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கைகளை ஏற்று, முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அனைத்து வகுப்புகளுக்கும் (1 முதல் 12-ஆம் வகுப்பு வரை) ஒரே சீராக ஜூன் 4-ஆம் தேதி (வியாழக்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

பள்ளிகள் திறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் வட தமிழகப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. வேலூர், சென்னை, கரூர், திருத்தணி, பாளையங்கோட்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வெயில் சதம் அடித்து (100°F தாண்டி) அனல் காற்று வீசி வருகிறது.

இத்தகைய கடுமையான வெப்பச் சூழலில் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றால் அவர்களின் உடல்நலம் பாதிக்கப்படலாம் எனப் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, வெயிலின் தாக்கம் குறையும் வரை பள்ளிகள் திறப்பை மேலும் ஒரு வாரம் ஒத்திவைக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் மாறுமா என்பது குறித்து கல்வித்துறை தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. எனினும், ஏற்கனவே ஜூன் 1-லிருந்து ஜூன் 4-க்கு மாற்றப்பட்டுள்ளதால், திட்டமிட்டபடி பள்ளிகளைத் திறந்துவிட்டு, வெயில் அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் மட்டும் ஆரம்பப் பள்ளிகளுக்குப் பிரத்யேக சலுகைகள் அல்லது கூடுதல் விடுமுறை அளிப்பது குறித்தும் அரசு பரிசீலிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த இரண்டு நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.