"சூழல் சரியில்லை... முதல்வர் விஜய் இப்போதைக்கு கர்நாடகா வர வேண்டாம்" - டி.கே. சிவக்குமார் கோரிக்கை!

 

மேகதாது அணை மற்றும் காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் கர்நாடகா வரவிருந்த நிலையில், அங்குச் சூழல் சரியில்லாததால் தற்போதைக்கு அவர் வர வேண்டாம் என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேகதாது அணை மற்றும் காவிரி நீர் இருப்பு குறித்து மாநில நீர்வளத் துறை அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் பேசுகையில்,  "கர்நாடகத்தில் தற்போது சூழல் சரியாக இல்லை. இங்குப் பதற்றமான சூழல் நிலவுவதால், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இப்போதைக்கு வர வேண்டாம். இரு மாநில நிலைமைகளும் சீரான பிறகு வேறு ஒரு நாளில் நாம் சந்தித்துப் பேசலாம்" என்று தெரிவித்துள்ளார்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் நீர் திறப்பு உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் விரைவில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சரும் தாமும் அவரவர் மாநிலங்களின் நலனில் அதிக அக்கறையுடனும் கவனத்துடனும் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

கர்நாடகாவில் உள்ள முக்கிய அணைகளின் தற்போதைய நீர் இருப்பு விவரங்களையும் அவர் வெளியிட்டார்: அதில், ஹாரங்கி அணை: 95% நீர் இருப்பு, கபிணி அணை: 83% நீர் இருப்பு, ஹேமாவதி அணை: 61% நீர் இருப்பு, கே.ஆர்.எஸ் (KRS) அணை: 36% நீர் இருப்பு

இரு மாநில அதிகாரிகளும் இது குறித்துத் தொடர்ந்து பேசி வரும் நிலையில், காவிரி மேலாண்மை உத்தரவுகள் மற்றும் மாநில நீர் தேவைகள் குறித்து சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடரும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.