விண்ணதிர்ந்த ‘அரோகரா’ கோஷம்... சூர பத்மனை வதம் செய்தார் முருகர்... திருச்செந்தூரில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!

 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடலோரத் தலமுமான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் உச்சக்கட்ட நிகழ்வான 'சூரசம்ஹாரம்' வெகு விமரிசையாகவும் பக்திப் பரவசத்துடனும் நடைபெற்றது.

அசுரர்களின் தீமைகளை அழிக்கவும், தர்மத்தை நிலைநாட்டவும் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்த வரலாற்றுச் நிகழ்வைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

சஷ்டி திருவிழாவின் முக்கிய நாளான இன்று, ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் கடற்கரைக்கு எழுந்தருளி, சூரபத்மனுடன் போர் புரியும் கண்கொள்ளாக் காட்சிகள் நடைபெற்றது. கடற்கரை முழுவதும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வருகை தந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். சூரபத்மன் வதம் செய்யப்பட்ட அந்தத் தருணத்தில், பக்தர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து "வெற்றி வேல், வீர வேல்" மற்றும் "முருகனுக்கு அரோகரா" என்ற பக்தி முழக்கங்களை எழுப்பித் தங்களது மகிழ்ச்சியையும் பரவசத்தையும் வெளிப்படுத்தினர்; மேலும் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

இத்திருவிழாவை முன்னிட்டுத் திருச்செந்தூர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததுடன், பக்தர்களின் வசதிக்காகத் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் மற்றும் சிறப்புப் போக்குவரத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.