48 மணி நேரத்திற்குள் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க வேண்டும்..  ஈரானுக்கு கெடு விதித்த ட்ரம்ப்!

 

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போர் தற்போது மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இரு தரப்பிலும் கடுமையான தாக்குதல்கள் நீடிக்கின்றன.

உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கியமான பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதை அடுத்த 48 மணி நேரத்திற்குள் மீண்டும் திறக்க வேண்டும் என அதிபர் டிரம்ப் கெடு விதித்துள்ளார். இந்த நிபந்தனையை ஈரான் நிறைவேற்றத் தவறினால், அந்த நாட்டின் மீதமுள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களையும் அமெரிக்கப் படைகள் தரைமட்டமாக்கும் என எச்சரித்துள்ளார்.

3 வாரங்களுக்கும் மேலாக நடந்து வரும் தொடர் வான்வழித் தாக்குதல்களால் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. ஈரான் முற்றிலும் சீரழிந்துவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரானின் ஏவுகணைகள் மற்றும் கிளஸ்டர் குண்டுகள் இஸ்ரேலின் 'அயர்ன் டோம்' பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் நகரங்களைத் தாக்கி வருகின்றன. இதனால் இஸ்ரேலிய நகரங்களும் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளன.

தனது முக்கியத் தலைவர்களை இழந்த போதிலும், ஈரான் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஏவுகணைகளை வீசி வருகிறது. அமெரிக்கா தரைவழித் தாக்குதலில் ஈடுபட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது.