தவெக-வின் பலம் 114-ஆக உயர்வு... இந்திய கம்யூனிஸ்ட் நிபந்தனையற்ற ஆதரவு!
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை நிரூபிக்கத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தீவிரமாகப் போராடி வரும் நிலையில், அவருக்குப் பலம் சேர்க்கும் விதமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில், தமிழக மக்கள் அளித்துள்ள தீர்ப்பை மதிக்கும் வகையில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக ஆட்சி அமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிலிருந்து நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகிறது. ஜனநாயக முறைப்படி தவெக-வை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டியது ஆளுநரின் கடமை என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தனது 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைத் தவெக-விற்கு வழங்கியிருந்த நிலையில், தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவும் கிடைத்துள்ளதால், விஜய்யின் பலம் 114-ஆக உயர்ந்துள்ளது. தேவையான பலம்: 118, தற்போதைய பலம்: 114 (தவெக 108 + காங்கிரஸ் 5 + சிபிஐ 1), இன்னும் தேவை: 4 எம்.எல்.ஏ-க்கள்
ஆட்சி அமைக்க இன்னும் வெறும் 4 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு மட்டுமே தேவைப்படும் நிலையில், விசிக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPIM) கட்சிகளின் முடிவை நோக்கி அரசியல் நகர்வுகள் வேகம் எடுத்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று மாலைக்குள் தனது முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில், அக்கட்சியும் ஆதரவு அளித்தால் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்பது உறுதியாகிவிடும்.
இந்தத் திடீர் திருப்பங்களால் திமுக கூட்டணி சிதறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இன்று மாலை 4:30 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கச் செல்லும் விஜய், சிபிஐ-யின் ஆதரவுக் கடிதத்தையும் ஆளுநரிடம் சமர்ப்பிப்பார் எனத் தெரிகிறது.