ஆய்வில் அதிர்ச்சி... நாடு முழுவதும் அடுத்த 6 மாதங்களில் 15,800 பேர் கூடுதலாக பலியாக நேரிடும்... இந்தியாவில் எல் நினோ தாக்கம் அதிகமிருக்கும்!

 

சூப்பர் எல் நினோ நிகழ்வின் கடுமையான தாக்கம் காரணமாக இந்தியாவில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும், இதன் விளைவாக அடுத்த 6 மாதங்களில் 15,800 பேர் கூடுதலாக உயிரிழக்க வாய்ப்புள்ளதாகவும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்தி கொள்கை நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் எல் நினோவின் தாக்கம் இந்தியாவில் பெரும் காலநிலை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதன் தாக்கம் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை நீடிக்கும் என உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது. வழக்கமான ஆண்டு மரண எண்ணிக்கையை விட, இந்த எல் நினோ பருவத்தின் கூடுதல் வெப்பத்தால் உலகம் முழுவதும் அடுத்த 6 மாதங்களில் சுமார் 2.3 லட்சம் கூடுதல் மரணங்கள் நிகழலாம் என அந்த ஆய்வு கணக்கிட்டுள்ளது.

தெற்கு ஆசியாவில் எல் நினோவால் உருவாகும் தீவிர வெப்பத்தால் பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து மற்றும் கம்போடியா போன்ற நாடுகளில் 19,400 இறப்புகள் வரையிலும், குறிப்பாக பிலிப்பைன்ஸில் 19,300 மரணங்களும் நேரலாம். இந்தியாவில் அடுத்த 6 மாதங்களில் 15,800 பேர் கூடுதலாக உயிரிழக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, தென் அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளில் 13,300 பேர் வரை எல் நினோ தாக்கத்தால் பலியாகக்கூடும் என அந்த ஆய்வறிக்கை அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது.