சதமடிக்கும் வெயில்.. எலுமிச்சை விலை ‘கிடுகிடு’ உயர்வு! கிலோ ரூ.160-க்கு விற்பனை- பழங்கள், காய்கறிகளின் லேட்டஸ்ட் ரேட் லிஸ்ட்!

 

தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்பட்டும் கோவை மாவட்டத்திலும் கோடை வெயில் அனலாக வாட்டி வதைத்து வருகிறது.

வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்கப் பொதுமக்கள் பழச்சாறுகளை நாடுவதால், எலுமிச்சை உள்ளிட்ட பழங்களின் தேவை அதிகரித்து விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சதமடித்து வருவதால், குளிர்ச்சியான பானங்களுக்குக் கிராக்கி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்துள்ளதால், அதன் விலை கிலோ ரூ.160 ஆக உயர்ந்துள்ளது.

கோவையில் உள்ள உழவர் சந்தைகளில் இன்று (ஏப். 12) மற்ற பழங்களின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. பழங்களின் இன்றைய விலை நிலவரம் (கிலோவில்) வெயிலைச் சமாளிக்க மக்கள் அதிகம் வாங்கும் பழங்களின் பட்டியல்

ஆப்பிள்: ரூ.280, மாதுளை: ரூ.240, ஆரஞ்சு: ரூ.140, கருப்பு திராட்சை: ரூ.100, சாத்துக்குடி: ரூ.60, முலாம்பழம்: ரூ.35, தர்பூசணி: ரூ.30 ஆகிய விலைகளிலும், பழங்கள் மட்டுமின்றி, அன்றாடத் தேவையான காய்கறிகளின் விலையிலும் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன.

தக்காளி (நாடு/ஆப்பிள்): ரூ.20 - ரூ.22, பெரிய/சின்ன வெங்காயம்: ரூ.20 - ரூ.30, பாகற்காய்: ரூ.45, கத்தரிக்காய்: ரூ.44, வெண்டைக்காய்: ரூ.58,அவரைக்காய்: ரூ.62 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வரப்படுகிறது.

விலை உயர்வு குறித்து இல்லத்தரசிகள் கூறுகையில், "வெயிலின் கொடுமையால் பழங்கள் வாங்க வேண்டியது அவசியமாகிறது. ஆனால், எலுமிச்சை மற்றும் மாதுளை போன்ற பழங்களின் விலை பட்ஜெட்டை மீறுவதாக உள்ளது" எனத் தெரிவிக்கின்றனர். வரும் நாட்களில் வெயில் அதிகரித்தால் விலை இன்னும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கணித்துள்ளனர்.