மனைவியைப் பராமரிப்பது கணவனின் முதற்கடமை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு - “கண்ணியமான வாழ்க்கை மாயையாக இருக்கக்கூடாது!”

 

பிரிந்து வாழும் மனைவிக்கு வழங்கப்படும் பராமரிப்புத் தொகை (ஜீவனாம்சம்) என்பது வெறும் சடங்காகவோ அல்லது மாயையாகவோ இருக்கக்கூடாது என்றும், மனைவியைப் பராமரிப்பது கணவனின் முதன்மையான மற்றும் தொடர்ச்சியான கடமை என்றும் உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தெரிவித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த தம்பதியினருக்கு 2023-இல் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு மற்றும் குடும்ப வன்முறை காரணமாகத் திருமணமான ஓராண்டிற்குள்ளேயே அந்தப் பெண் தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். தனது வாழ்க்கைச் செலவிற்காக மாதம் ரூ.50 ஆயிரம் கோரி அவர் தொடர்ந்த வழக்கில், குடும்ப நல நீதிமன்றம் மாதம் ரூ.8,000 வழங்க உத்தரவிட்டது. உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் இந்தத் தொகையை ரூ.15,000-ஆக உயர்த்தி தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து அந்தப் பெண் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மசி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பளித்தது. அதில், உயர் நீதிமன்றம் நிர்ணயித்த ரூ.15,000 பராமரிப்புத் தொகையை ரூ.25,000-ஆக உயர்த்தி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மனைவியைப் பராமரிப்பது கணவனின் முதன்மையான மற்றும் மாறாத கடமை. திருமண உறவு இணக்கமாக இருந்தபோது அந்தப் பெண் எந்தத் தரமான வாழ்க்கையை வாழ்ந்தாரோ, அதே கண்ணியமான வாழ்க்கையை அவர் பிரிந்து வாழும்போதும் உறுதி செய்ய வேண்டியது கணவனின் பொறுப்பு. பராமரிப்புத் தொகை என்பது மனைவி நியாயமாகவும், கண்ணியத்துடனும் வாழ வழிவகை செய்ய வேண்டும். அதே நேரத்தில், கணவர் மீது அது தாங்க முடியாத சுமையாக மாறிவிடக்கூடாது என்பதிலும் நீதிமன்றம் கவனமாக இருக்க வேண்டும்.

“ஜீவனாம்சம் என்பது ஒரு மாயையாக இருக்கக்கூடாது. சம்பந்தப்பட்ட தரப்பினரின் தகுதி மற்றும் பொருளாதார நிலைக்கு ஏற்ப, அந்தப் பெண் தன்னைத் தானே கௌரவமாகப் பராமரித்துக் கொள்ளும் வகையில் நிதி உதவி அமைய வேண்டும்” என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.