“தமிழ்நாடு அரசைக் கலைக்க வேண்டும்”... ஆளுநரிடம் நயினார் நாகேந்திரன் மனு!
தமிழ்நாடு அரசைக் கலைக்க வேண்டும் என வலியுறுத்தி, சென்னை மக்கள் மாளிகையில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நேரில் சந்தித்து மனு அளித்தார். சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, கள்ளக்குறிச்சி விவகாரம் மற்றும் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து இந்தக் கோரிக்கை மனுவை அவர் அளித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “தமிழ்நாட்டில் கடந்த 7 மாதங்களில் 620 கொலைகள் நடந்துள்ளன. ஆபாசக் குறுஞ்செய்தி விவகாரத்தில் 3 மாதங்களாக எஃப்.ஐ.ஆர். கூடப் போடாதவர்கள் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்? த.வெ.க. ஆட்சியில் இருக்கும்வரை தமிழ்நாடு காவல்துறை மீது நம்பிக்கை இருக்காது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவைத் தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை. அரசமைப்புச் சட்டக் கடமையை மாநில அரசு செய்யவில்லை என்பதால் அரசைக் கலைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
“அன்று திமுக திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றவில்லை; அதனால் இன்று ஆளுங்கட்சியாக இல்லை. அதே போல இந்த முறை த.வெ.க.வும் தீபம் ஏற்றவில்லை; எதிர்காலத்தில் த.வெ.க. ஆளுங்கட்சியாக இருக்காது” என்று கூறிய அவர், “திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்திய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம்” என்றார்.
கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான புகாரில் மூன்று மாதங்களாக வழக்குப் பதிவு செய்யாததால், தமிழகக் காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என நயினார் நாகேந்திரன் மீண்டும் சுட்டிக்காட்டினார்.
உச்ச நீதிமன்ற உத்தரவைத் தமிழ்நாடு அரசு மதிக்கவில்லை என்றும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆளுநரிடம் வலியுறுத்தி உள்ளதாகக் கூறிய அவர், மனு குறித்து ஆளுநர் விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார்.