கள் தடையை நீக்கக் கோரும் வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
தமிழ்நாட்டில் கள் இறக்கவும் விற்பனை செய்யவும் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மாநில அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த தீரன் திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். தமிழகத்தில் கள் இறக்குவதற்கும், அதை விற்பனை செய்வதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடையை முழுமையாக நீக்க வேண்டும் என்றும், கள் பயன்பாட்டிற்கெனத் தனியாக உரிய கொள்கையை அரசு உருவாக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாகத் தமிழக அரசு உரிய பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், இதே கோரிக்கையுடன் நீதிமன்றத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ள பிற வழக்குகளோடு சேர்த்து இந்த மனுவும் விசாரிக்கப்படும் எனக் கூறி விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.