‘தர்மயுத்தத்திற்கு’ வந்த சோதனை... திமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்... சசிகலாவின் அம்மா அதிமுகவுக்கும் கல்தா!
இன்று பசும்பொன் கிராமத்தில் தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை சசிகலா வெளியிடுவார் என்கிற எதிர்பார்ப்பு அரசியல் விமர்சகர்களிடையே எழுந்துள்ளது. ஜெயலலிதா என்கிற மிகப் பெரிய ஆளுமை, எம்ஜிஆருக்குப் பின்னர் அதிமுகவை கட்டுக்கோப்பாக காப்பாற்றி வந்த நிலையில், இப்போது கோயில் சிதறு தேங்காய் போல வந்தவர், போனவர் எல்லாம் கட்சியை அடமானம் வைக்கிறாய்ங்களே என்று அதிமுக தொண்டர்கள் ஜெ மறைவுக்கு பின்பிருந்தே புலம்ப தொடங்கி விட்டனர். நோட்டோ வாக்குகளும், வாக்களிக்கவே செல்லாமல் இருப்பதும் பெரும்பாலும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அதிமுக விசுவாசிகள் தான் என்கின்றன தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்.
இதோ அதோ என்று போக்கு காட்டிக் கொண்டிருந்த பிரேமலதா கூட திமுக கூட்டணியில் ஐக்கியமாகி விட்டார். டிடிவிக்கு யெஸ் சொன்ன எடப்பாடி அதிமுக, ஓபிஎஸ்ஸுக்கு இன்னும் சம்மதம் சொல்லவில்லை. ஒத்த சீட்டுக்காக பாஜக கூட்டணியில் இணைவதா? என்று தர்மயுத்தம் ஓபிஎஸ் யோசிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மகனுக்கு எம்பி சீட்டு என்று பேச்சுவார்த்தையுடன் திமுகவில் இணையவும் வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, ஒவ்வொரு ஆண்டும் ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று சென்னையில் உள்ள அவரது முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து ஓ. பன்னீர்செல்வம் மரியாதை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த ஆண்டும் இன்று சென்னையில் மரியாதை செலுத்தப் போவதாக கடந்த 19-ம் தேதி ஓபிஎஸ் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அந்த அறிவிப்பு திடீரெனத் திரும்பப் பெறப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பின்படி, அவர் சென்னையில் உள்ள சிலைக்கு மாலை அணிவிப்பதைத் தவிர்த்துவிட்டு, தனது போடி சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் ஜெயலலிதாவின் படத்திற்கு மட்டும் மலர் தூவி மரியாதை செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ்ஸின் இந்தத் திடீர் பின்வாங்கல்தான் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. அவர் விரைவில் திமுகவில் இணையக்கூடும் என்ற தகவல்கள் உலா வரும் நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஓபிஎஸ்ஸின் நெருங்கிய ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் ஏற்கனவே திமுகவில் ஐக்கியமாகிவிட்டனர். இந்தச் சூழலில் ஓபிஎஸ் மட்டும் தனியாக இயங்குவது கடினம் என்பதால், அவரும் ஆளுங்கட்சிப் பக்கம் சாய வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
அதேவேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளார். ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக அறியப்பட்ட ஓபிஎஸ், அவரது பிறந்தநாள் நிகழ்ச்சியைத் தவிர்ப்பது, அதிமுகவின் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வருவதையும் அவர் புதிய அரசியல் பாதையைத் தேர்வு செய்வதையும் குறிப்பதாகப் பார்க்கப்படுகிறது.