"விஜய் முதல்வராக வேண்டி யாகம் வளர்த்த தவெக தொண்டர்கள்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதில் நிலவும் இழுபறிகளை நீக்கக் கோரி, அக்கட்சித் தொண்டர்கள் தீவிர வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் பகுதியில் புகழ்பெற்ற சலக்கரை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்குத் திரண்ட தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்க வேண்டிச் சிறப்பு யாகம் வளர்த்துப் பிரார்த்தனை செய்தனர்.
கோவிலில் உள்ள மாரியம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற யாகத்தில், தவெக-விற்கு ஏற்பட்டுள்ள அரசியல் முட்டுக்கட்டைகள் விலகி, விஜய் விரைவில் கோட்டையில் அமர வேண்டும் என வேண்டிப் பூரணாகுதி செலுத்தப்பட்டது.
108 இடங்களை வென்ற போதிலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற எண்ணிக்கையை எட்டுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள், இறைவனின் அருளால் விரைவில் தீரும் எனத் தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
தமிழகத்தில் தொங்கு சட்டப்பேரவை ஏற்பட்டுள்ள நிலையில், இன்று மாலை விஜய் ஆளுநரைச் சந்திக்க உள்ளார். காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ள நிலையில், இடதுசாரிகளின் முடிவும் விஜய்க்குச் சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய ஒரு முக்கியமான நாளில், விஜய்யின் வெற்றிக்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இத்தகைய பிரார்த்தனைகள் நடைபெற்று வருவது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.