இன்று TNPL கிரிக்கெட் தொடர் தொடக்கம் - நத்தத்தில் மோதும் திருப்பூர் - திண்டுக்கல் அணிகள்!

 

தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 10-வது சீசன் இன்று திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் கோலாகலமாகத் தொடங்குகிறது. 10-வது சீசனின் முதல் கட்ட ஆட்டங்கள் ஆகஸ்ட் 4 முதல் 18-ம் தேதி வரை திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெறுகின்றன.

பிளே-ஆஃப் மற்றும் இறுதிப்போட்டி உள்ளிட்ட இரண்டாம் கட்ட ஆட்டங்கள் ஆகஸ்ட் 18 முதல் 28-ம் தேதி வரை சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளன. நடப்பு சாம்பியன் திருப்பூர் தமிழன்ஸ், முன்னாள் சாம்பியன்களான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் என மொத்தம் 8 அணிகள் களமிறங்குகின்றன.

இத்தொடரின் மொத்தப் பரிசுத்தொகை ரூ.1.7 கோடியாகும். இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.50 லட்சமும், 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.30 லட்சமும் பரிசாக வழங்கப்படும். இந்த சீசனுக்கு முன்பாக 8 அணிகளும் சேர்ந்து 103 வீரர்களைத் தக்கவைத்து, 57 புதிய வீரர்களை ஏலத்தில் எடுத்தன. இதில் அதிகபட்சமாக சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் அஷ்வந்த் வல்தபாவை ரூ.14.45 லட்சத்திற்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், முகிலேசை ரூ.13.70 லட்சத்திற்கு நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்தன.

இந்திய அணியின் இலங்கை டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளதால் சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்தத் தொடரில் விளையாடவில்லை. மேலும், காயத்தால் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி பங்கேற்பதும் சந்தேகத்தில் உள்ளது.

இன்று இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் தொடக்க ஆட்டத்தில் சாய் கிஷோர் தலைமையிலான நடப்பு சாம்பியன் திருப்பூர் தமிழன்ஸ் அணியும், பாபா இந்திரஜித் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இதுவரை இரு அணிகளும் மோதிய 11 போட்டிகளில் திண்டுக்கல் 7 முறையும், திருப்பூர் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இப்போட்டிகள் சோனி ஸ்போர்ட்ஸ் டென் 4 தமிழ் தொலைக்காட்சியிலும், தமிழ்நாடு பிரீமியர் லீக் அதிகாரப்பூர்வ யூடியூப்  பக்கத்திலும் நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ளன.