undefined

 கதறியழுத தாய்... இறந்தது மகன் என்று தெரியாமலேயே விபத்து நடந்த இடத்திற்கு சென்ற துயரம்!

 
 

விபத்தில் உயிரிழந்தது தன்னுடைய மகன் என்பது தெரியாமலேயே ஏதோவொரு விபத்து நிகழ்ந்திருக்கிறது என்று விபத்து நடந்த இடத்திற்கு சென்ற தாய், சாலையில் தனது மகன் சடலமாக கிடந்ததைப் பார்த்து உடல் மீது விழுந்து கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.திருவண்ணாமலை மாவட்டம் ராமலிங்கனார் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் அந்த பகுதியில் இ - சேவை மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவி பாக்கியலட்சுமி. மகன் சிவசுதாகர் (32). சிவசுதாகர் ஐடி கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து  வந்தார்.

சிவசுதாகர் மனைவி தேவி, பிரசவத்திற்காக செய்யாறில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் ஆறுமுகம் தனது மனைவியையும், மகன் சிவசுதாகரையும் அழைத்துக் கொண்டு துணி வாங்குவதற்காக காஞ்சிபுரத்திற்கு சென்றுள்ளார். துணி வாங்கி முடித்ததும் அங்கிருந்து சிவசுதாகர்  தனது நண்பர் சஞ்சய் என்பவருடன் பைக்கில் மனைவி, குழந்தையை பார்ப்பதற்காக செய்யாறு கிளம்பி சென்று விட்டார். மனைவி குழந்தையைப் பார்த்து விட்டு செய்யாறில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்து கொண்டிருந்தார்.

சேத்துப்பட்டு அடுத்த வெளுக்கம்பட்டு கூட்டு ரோடு அருகே சென்றுக் கொண்டிருந்த போது எதிரே வந்த கார் மோதியதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பைக்கில் இருந்த சஞ்சய், காரில் வந்த 2 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

காஞ்சிபுரத்தில் துணிகளை வாங்கிக் கொண்டு சிவசுதாகரின் தந்தை ஆறுமுகம், மனைவியுடன் பைக்கில் திருவண்ணாமலைக்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது வெளுக்கம்பட்டு கூட்டு ரோடு அருகே நடந்த விபத்தைப் பார்த்து, என்ன விபத்து என்று எண்ணி வாகனத்தை நிறுத்தி விட்டு அருகே சென்று பார்த்தனர்.

ஏதோ விபத்து என்று எண்ணி அருகே சென்றதில், தனது மகன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பாக்கியலட்சுமி, சிவசுதாகரின் உடல் மீது விழுந்து அழுது புரண்டது காண்போரை கண் கலங்க செய்தது. இந்த சம்பவம் குறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்