மரத்திலிருந்த பலாப்பழத்தைப் பறிக்க காட்டு யானை செய்த வித்தைகள்!

 

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை எஸ்டேட் பகுதியில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று, பலா மரத்தில் இருந்த பழத்தைப் பறிப்பதற்காக ஒரு மணி நேரம் போராடிய சுவாரஸ்யமான சம்பவம் அப்பகுதியில் நடந்தேறியுள்ளது.

வால்பாறை அருகே உள்ள சின்னக்கல்லாறு, பெரியகல்லாறு மற்றும் சிங்கோனா ஆகிய எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் வழியில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த ஆண் காட்டு யானை ஒன்று, அங்குள்ள பலா மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த பலாப்பழத்தைக் குறிவைத்தது.

மரத்திலிருந்து பழத்தை எப்படிப் பறிப்பது என்று தெரியாமல் சிறிது நேரம் மரத்தைச் சுற்றிய அந்த யானை, பலா மரத்தைத் தலையால் முட்டி ஆட்டிப் பார்த்தது. இருப்பினும் பழம் கீழே விழாததால், பொறுமையை இழந்த யானை மரத்தின் மீது தனது முன்னங்கால்களைத் தூக்கி வைத்துத் துதிக்கையை நீட்டிச் சிரமப்பட்டுப் பலாப்பழத்தைப் பறித்தது.

தன் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு பறித்த பலாப்பழத்தை அந்த யானை மிகுந்த திருப்தியுடன் ருசித்துத் தின்றது. இந்தச் சுவாரஸ்யமான காட்சியைக் கண்டு அப்பகுதியில் தோட்டப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், பாதுகாப்புப் பணியில் இருந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் மெய்சிலிர்த்துப் போயினர்.