ஆட்சி அமைப்பதில் இழுபறி... இன்று மீண்டும் கூடுகிறது தவெக MLA-க்கள் கூட்டம்!

 

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை நிரூபிப்பதில் தொடர்ந்து முட்டுக்கட்டை நீடித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (மே 8) மீண்டும் நடைபெறுகிறது. சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் காலை 9 மணிக்குத் தொடங்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

தவெக ஆட்சி அமைக்கத் தேவையான பலத்தைப் பெற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கோரப்பட்டுள்ளது. இந்தக் கட்சிகள் தங்களின் இறுதி முடிவை இன்று அறிவிக்க உள்ள நிலையில், அந்த முடிவைப் பொறுத்தே விஜய்யின் பதவியேற்பு உறுதி செய்யப்படும். ஏற்கனவே காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ள போதிலும், இந்த மூன்று கட்சிகளின் ஆதரவு கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதால் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி பதவியேற்பு விழா நடைபெறுமா அல்லது அரசியல் சூழல் வேறு திசையில் மாறுமா என்ற குழப்பத்தால் தவெக தொண்டர்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்தச் சூழலில், இன்றைய எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.