இளம்பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்த தவெக நிர்வாகி... நேரில் பார்த்த 7 வயது சிறுவனுக்குச் சிகரெட் சூடு வைத்த கொடுமை!

 

கடலூரில் கப்பல் மாலுமி ஒருவர் வேலைக்காக வெளிநாடு சென்றிருந்த நேரத்தில், அவரது மனைவியுடன் நெருங்கிப் பழகிப் பணம் பறித்ததோடு, தங்களது தவறான உறவை நேரில் பார்த்த 7 வயது சிறுவனுக்குச் சிகரெட்டால் சூடு வைத்துக் கொடுமைப்படுத்திய தவெக வழக்கறிஞர் சிவகுரு மற்றும் சிறுவனின் தாய் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கப்பல் மாலுமியாக வேலை பார்த்து வருகிறார். இவர் பணி நிமித்தமாக நீண்ட நாட்கள் வெளிநாட்டிற்குச் சென்றிருந்த நிலையில், இவரது மனைவி கடலூரில் வசித்து வந்துள்ளார். இந்தத் தனிமையைப் பயன்படுத்திக் கொண்ட தவெக கடலூர் மாவட்ட வழக்கறிஞர் அணி நிர்வாகியான சிவகுரு என்பவர், மாலுமியின் மனைவியுடன் நெருங்கிப் பழகியுள்ளார். இந்தப் பழக்கம் நாளடைவில் தவறான உறவாக மாறியுள்ளது. இதனைப் பயன்படுத்தி மாலுமியின் மனைவியிடமிருந்து சிவகுரு லட்சக்கணக்கில் பணத்தையும் பறித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், வழக்கறிஞர் சிவகுருவும் மாலுமியின் மனைவியும் வீட்டில் அலங்கோலமாக பாலியல் உறவுக் கொண்டதைப் பார்த்த அந்தப் பெண்ணின் 7 வயது மகன் அதிர்ச்சியடைந்துள்ளார். தங்களது இந்தத் தவறான உறவு வெளியில் தெரிந்துவிடும் என்று அஞ்சிய இருவரும், அந்த சிறுவனின் வாயை மூடி மிரட்டியுள்ளனர். மேலும், யாரிடமாவது இது குறித்து கூறினால் கொன்று விடுவதாக மிரட்டி, அச்சிறுவனின் உடலில் பல்வேறு இடங்களில் சிகரெட்டால் கொடூரமாகச் சூடு வைத்துக் சித்திரவதை செய்துள்ளனர்.

அண்மையில் வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய கப்பல் மாலுமி, தனது மகனின் உடலில் காயங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து விசாரித்துள்ளார். அப்போது சிறுவன் தனக்கு நேர்ந்த கொடுமைகளையும், தாயின் தவறான உறவு குறித்தும் அழுது கொண்டே தந்தையிடம் விவரித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த மாலுமி, உடனடியாகக் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது மனைவி மற்றும் வழக்கறிஞர் சிவகுருவுக்கு எதிராகப் புகார் அளித்தார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், குழந்தையைச் சித்திரவதை செய்தது மற்றும் பாலியல் அச்சுறுத்தல் தந்த பிரிவுகளின் கீழ், வழக்கறிஞர் சிவகுரு மற்றும் சிறுவனின் தாய் ஆகிய இருவர் மீதும் கடுமையான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாகியுள்ள இருவரையும் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

ஆளுங்கட்சியின் பொறுப்பில் உள்ள வழக்கறிஞரே சொந்தக் குழந்தையின் தாய்மையைக் கொச்சைப்படுத்தி, குழந்தைக்குக் கொடூரச் சித்திரவதை அளித்துள்ள சம்பவம் கடலூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.