கதறும் அமெரிக்கா... ஹார்முஸ் ஜலசந்தியில் பறந்த ரூ.1,700 கோடி மதிப்புள்ள அமெரிக்க ட்ரோன் மாயம்; மீண்டும் போர் பதற்றம்!
போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல் போக்குவரத்தைக் கண்காணிக்கச் சென்ற அமெரிக்காவின் அதிநவீன உளவு ட்ரோன் திடீரென மாயமாகியுள்ளது. சுமார் 1,700 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஆளில்லாத விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளதால், அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணை வழியாகச் சரக்கு மற்றும் எண்ணெய் கப்பல்களை அனுமதிக்க ஈரான் ஒப்புக்கொண்டது. இந்தச் சூழலில், ஈரானின் செயல்பாடுகளையும், கப்பல் போக்குவரத்தையும் வான்வழியாகக் கண்காணிக்க அமெரிக்கக் கடற்படை முடிவு செய்தது.
இதற்காக, உலகிலேயே அதிநவீன உளவுத் தொழில்நுட்பம் கொண்ட 'எம்கியூ-4சி டிரைட்டன்' என்ற ஆளில்லாத உளவு ட்ரோனை அமெரிக்கா நேற்று களமிறக்கியது. இந்திய ரூபாய் மதிப்பில் இதன் விலை சுமார் 1,700 கோடி ரூபாய் ஆகும். நேற்று ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்த ட்ரோன், ஈரானிய வான் எல்லைக்கு அருகில் பறந்தபோது திடீரென ரேடார் திரையிலிருந்து மறைந்தது.
விண்கலனுக்கும் தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டது. சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாகியும் ட்ரோன் இருக்கும் இடம் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
ஈரான் ஏற்கனவே ஹார்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடிகளைப் பொருத்தியுள்ளதாகவும், அதன் வான் எல்லைக்குள் நுழையும் எதையும் சுட்டு வீழ்த்துவோம் என்றும் எச்சரித்திருந்தது. இந்தச் சூழலில் அமெரிக்க ட்ரோன் மாயமாகியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஈரான் தாக்குதலா?: ட்ரோன் ஈரானிய ஏவுகணைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதா? தொழில்நுட்பக் கோளாறா?: அல்லது இயந்திரக் கோளாறு காரணமாகக் கடலில் விழுந்து நொறுங்கியதா? அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் இது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. ட்ரோன் மாயமான இடத்திற்கு அமெரிக்கப் போர்க்கப்பல்கள் விரைந்துள்ளன.
ஏற்கனவே லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலால் ஈரான் ஆத்திரத்தில் உள்ள நிலையில், அமெரிக்காவின் ட்ரோன் மாயமாகியிருப்பது எரிதணலில் எண்ணெய் ஊற்றியது போலாகியுள்ளது. ஒருவேளை ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது உறுதி செய்யப்பட்டால், தற்போதுள்ள தற்காலிகப் போர் நிறுத்தம் உடனடியாக முறிந்து மீண்டும் முழு அளவிலான போர் வெடிக்க வாய்ப்புள்ளதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.