டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி.. சாமானியர்களுக்கு என்ன பாதிப்பு?!

 

மத்திய கிழக்கு ஆசியாவில் (அமெரிக்கா - ஈரான்) நீடித்து வரும் போர் மேகங்கள், இந்திய ரூபாயின் மதிப்பை நிலைகுலையச் செய்துள்ளன. சர்வதேச சந்தையில் டாலருக்கான மவுசு அதிகரித்து வருவதால், இந்திய ரூபாயின் மதிப்பு இன்று மளமளவெனச் சரிந்து, வரலாற்றில் இல்லாத அளவாக ரூ. 92.71-ஐத் தொட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலால் அந்த ஒப்பந்தம் முறியும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தத் தெளிவற்ற நிலையால், அன்னியச் செலாவணி சந்தையில் டாலரின் தேவை அதிகரித்துள்ளது.

ஏப்ரல் 8ம் தேதி ரூ.92.54 ஆக இருந்த ரூபாயின் மதிப்பு, நேற்று 17 காசுகள் சரிந்து ரூ. 92.71 ஆகியுள்ளது. இன்று (ஏப். 11) நிலவரப்படி, ஒரு டாலரை வாங்க சுமார் ரூ. 93 வரை செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி இந்தியப் பங்குச்சந்தையிலும் எதிரொலித்துள்ளது. அந்நிய முதலீட்டாளர்கள் (FIIs) இந்தியச் சந்தையிலிருந்து தங்களது முதலீடுகளைத் தொடர்ந்து வெளியேற்றி வருவதால், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. நேற்று மட்டும் சுமார் ரூ. 2,800 கோடிக்கும் அதிகமான பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

டாலர் மற்றும் போர்ச் சூழலால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இதனால் தமிழகத்தில் தங்கம் விலை இன்று மலைபோல உயர்ந்துள்ளது:

22 காரட் (1 கிராம்): ரூ. 14,125

24 காரட் (1 கிராம்): ரூ. 15,409

8 கிராம் (1 சவரன்): சுமார் ரூ. 1,13,000-ஐத் தாண்டியுள்ளது.

சாமானியர்களுக்கு என்ன பாதிப்பு?

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவதால், கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவு பல மடங்கு அதிகரிக்கும். ஹார்முஸ் நீரிணை முடக்கம் மற்றும் எண்ணெய் விலை உயர்வால், வரும் நாட்களில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை அதிரடியாக உயர வாய்ப்புள்ளது. இது அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதால், நடுத்தரக் குடும்பத்தினர் கடும் கவலையில் உள்ளனர்.

இந்திய ரிசர்வ் வங்கி ரூபாயின் சரிவைத் தடுக்கப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், சர்வதேசப் போர்ச் சூழல் சீரானால் மட்டுமே இந்தியப் பொருளாதாரம் பழைய நிலைக்குத் திரும்பும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.