பழுதான பிரேக்குடன் 463 கி.மீ. தூரம் பயணித்த வந்தே பாரத் ரயில்... ரயில்வே ஊழியர்களின் அலட்சியத்தால் அதிர்ச்சி!

 

பிரேக் அமைப்பு முற்றிலும் பழுதான நிலையில், பயணிகள் யாரும் இன்றி வெறும் பெட்டிகளுடன் சென்ற வந்தே பாரத் ரயில் சுமார் 463 கிலோமீட்டர் தூரம் பயணித்த சம்பவம் இந்திய ரயில்வே துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் ஹட்டியாவில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி நோக்கி, பயணிகள் யாரும் இன்றி வெறும் வந்தே பாரத் ரயில் பெட்டிகளைச் சரக்கு ரயில் என்ஜின் மூலம் கொண்டு செல்ல கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது வந்தே பாரத் ரயிலின் பிரேக் அமைப்பைச் சரக்கு ரயில் என்ஜினுடன் முறையாக இணைக்க வேண்டியிருந்தது. ஆனால், ரயில்வே ஊழியர்கள் அதனைச் சரியாக இணைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ராஞ்சி ரயில் நிலையத்தில் ரயிலை இயக்கிய என்ஜின் டிரைவர், பிரேக் சரியாகச் செயல்படவில்லை என்பதை உணர்ந்து உடனடியாக அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இருப்பினும், அந்த ரயிலைத் தொடர்ந்து இயக்க அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். வழியில் உள்ள முரி ரயில் நிலையத்தில் ரயிலைப் பொறுப்பேற்ற மற்றொரு என்ஜின் டிரைவரும் பிரேக் பழுது குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். ஆனாலும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

உத்தரப் பிரதேச மாநிலம் சந்தாலி மாவட்டத்தில் உள்ள தீன் தயாள் உபாத்யாயா ரயில் நிலையத்திற்கு ரயில் சென்றடைந்த பிறகுதான், அதிகாரிகள் ரயிலை நேரில் ஆய்வு செய்தனர். அப்போது ரயிலின் அனைத்து பெட்டிகளிலும் பிரேக் அமைப்புகள் செயலிழக்கச் செய்யப்பட்டிருந்தது அம்பலமானது.

ரயிலின் பிரேக்குகளை முறையாக ஆய்வு செய்யாத பராமரிப்புப் பிரிவு ஊழியர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் ரயிலை இயக்கிய என்ஜின் டிரைவர்கள் எனப் பல தரப்பினரின் தீவிர அலட்சியம் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இத்தகைய ஆபத்தான மற்றும் தீவிர அலட்சியச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், எதிர்காலத்தில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றவும் தென்கிழக்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.