கன்னிகைப்பேர் துயரம்.. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் விஜய் அறிக்கை; உடல்களைச் சொந்த மாநிலத்திற்கு அனுப்ப உத்தரவு!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் இன்று மதியம் நேர்ந்த கொடூர அமோனியா வாயு கசிவு விபத்து குறித்துத் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். இவ்விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள முதலமைச்சர், தலா ரூ.2 லட்சம் அவசர நிவாரண உதவியை அறிவித்துள்ளார்.
ஆலை நிர்வாகி டேனியல் கைது செய்யப்பட்டுள்ள சூழலில், முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, ஊத்துக்கோட்டை வட்டம் பெரியபாளையம் அருகே இயங்கி வரும் தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையின் உற்பத்திப் பிரிவில் இன்று எதிர்பாராதவிதமாக அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில் அங்கு பணியில் இருந்த 60 பெண்கள், 4 ஆண்கள் உட்பட மொத்தம் 64 தொழிலாளர்கள் கடுமையான நச்சு வாயுத் தாக்கத்திற்கு உள்ளாகினர்.
பாதிக்கப்பட்டோர் தற்போதைய நிலை: இவ்விபத்தில் துரதிஷ்டவசமாக 2 பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். 15 நபர்கள் அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பிலும், 23 நபர்கள் தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவிலும், மேலும் 24 நபர்கள் தனியார் மருத்துவமனைக் கண்காணிப்பிலும் என மொத்தம் 62 தொழிலாளர்கள் அவசரச் சிகிச்சையில் உள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் வடமாநிலங்களைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்பதால், முதலமைச்சர் விஜய் பின்வரும் அவசர உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்:
"விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த ஆறுதலைத் தெரிவிப்பதோடு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு இலட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், உயிரிழந்த பெண்களின் உடல்களை அவர்களது சொந்த மாநிலத்திற்கு அனுப்பி, நல்லடக்கம் செய்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முழுக்க முழுக்க அரசுச் செலவிலேயே மேற்கொள்ள ஆணையிட்டுள்ளேன்." பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் எதிர்காலப் பாதுகாப்பினை உறுதி செய்யப் புதிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார்.
விபத்தில் சிக்கிய அனைத்துத் தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் மாநில ஈட்டுறுதி காப்பீட்டுத் திட்டம் மற்றும் வேலையாள் இழப்பீடு சட்டத்தின் கீழ் உரியப் பெருந்தொகை இழப்பீட்டை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் தமிழகத்தில் இதுபோன்ற விபத்துக்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் பொருட்டு, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துப் பேரபாய தொழிற்சாலைகளையும் உடனடியாகக் கூட்டுக்குழு ஆய்வுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து 24 மணி நேரத்திற்குள் முதற்கட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்:
தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர், பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய உறுப்பினர்-செயலர் ஆகியோர் அடங்கிய அவசர உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு 24 மணி நேரத்திற்குள் முதற்கட்ட அறிக்கையையும், 3 நாட்களுக்குள் முழுமையான புலனாய்வு அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும்.
முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் (IAS) மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பெரியபாளையம் விபத்து இடத்திற்கு நேரடியாகச் சென்று முகாமிட்டுத் தக்க மேல்நடவடிக்கைகளையும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கான உதவிகளையும் செய்து வருகின்றனர்.