தொடங்கியது போர்... தெஹ்ரான் மீது ஏவுகணை வீச்சு.. உலக நாடுகள் கவலை!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீண்ட நாட்களாக நிலவி வரும் போர் பதற்றம் தற்போது அதன் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று அதிரடி வான்வழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஈரான் நிலப்பரப்பின் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள இந்த நேரடித் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல் ஈரானுக்கு எதிரான ஒரு "தற்காப்பு நடவடிக்கை" என்று இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஈரானின் ராணுவக் கட்டமைப்பைச் சிதைப்பதே இந்தத் தாக்குதலின் நோக்கம் என்று அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. தெஹ்ரானின் மையப்பகுதியான ஜம்ஹூரி பகுதி மற்றும் பல்கலைக்கழக வீதி ஆகியவற்றில் இஸ்ரேலிய ஏவுகணைகள் விழுந்து வெடித்துள்ளன. மேலும், மிக முக்கியமான பகுதியான பாஸ்டர் வீதிக்கு அருகே பெரும் தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஏற்கனவே மோதல் நிலவி வரும் நிலையில், இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. தாக்குதல் தொடங்கியவுடன், ஈரான் அரசு தனது நாட்டு மக்களை எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான நிலத்தடி இடங்களுக்குச் செல்லுமாறு ஈரான் அரசு வலியுறுத்தியுள்ளது. ஈரான் இதற்கு மிகக்கடுமையான பதிலடி கொடுக்கக்கூடும் என்பதால், இஸ்ரேல் நாடு முழுவதிலும் வான்வழித் தாக்குதலுக்கான அபாயச் சங்கொலிகள் ஒலிக்கப்பட்டு வருகின்றன. எல்லையோரப் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலால் மத்திய கிழக்கு ஆசியாவில் ஒரு முழு அளவிலான போர் மூளும் அபாயம் உள்ளதாக அரசியல் மற்றும் ராணுவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.