“போர் இன்னும் முடியவில்லை... ஈரான் அணு ஆயுதங்களை முற்றிலும் நீக்க வேண்டும்..” - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சமீபத்திய பேட்டியால் மீண்டும் சூடுபிடித்துள்ளது. ஈரானின் அணு ஆயுத நெட்வொர்க் மற்றும் ஏவுகணை உற்பத்தி மையங்களை இஸ்ரேல் வெற்றிகரமாகச் சிதைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை என எச்சரித்துள்ளார். ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனிய இருப்புகள் பெருமளவில் அழிக்கப்பட்டாலும், எஞ்சியுள்ள அச்சுறுத்தல்களை அகற்ற வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேசக் கண்காணிப்பகங்களின் மதிப்பீட்டின்படி, ஈரானிடம் இன்னும் 970 பவுண்டுகள் யுரேனியம் கையிருப்பில் இருப்பது மேற்கத்திய நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அளவு யுரேனியம் அணு வெடிகுண்டுகளை உற்பத்தி செய்யப் போதுமானது என்பதால், அச்சுறுத்தலை நிரந்தரமாக நீக்க ஈரான் தனது அணு ஆயுதத் திட்டங்களை முற்றிலும் கைவிட வேண்டும் என நெதன்யாகு கூறியுள்ளார். இதற்காகத் தான் எந்தக் காலக்கெடுவையும் விதிக்கப் போவதில்லை என்றும், ஆனால் இதுவே அமைதிக்கான ஒரே வழி என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தித் திறனை முடக்கியுள்ள நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தது பதற்றத்தை அதிகரித்துள்ளது. அமெரிக்காவுடன் தங்களுக்கு எவ்வித மோதல் போக்கும் இல்லை என்று தெளிவுபடுத்திய நெதன்யாகு, பாதுகாப்பு விவகாரங்களில் இஸ்ரேல் தனது உறுதியான நிலைப்பாட்டைத் தொடரும் என்றார். ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தல் முழுமையாக அகற்றப்படும் வரை தங்களின் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் தொடரும் எனத் தெரிகிறது.