"அமெரிக்கா அவமானப்பட்டுச் சரணடையும் வரை போர் தொடரும்!" - ஈரான் சூளுரை
மத்திய கிழக்கில் ரத்த மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் தனது ஆக்ரோஷமான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. "அமெரிக்கா நிரந்தரமான வருத்தத்திற்கு ஆளாகும் வரை ஓயமாட்டோம்" என ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது.
போர் தொடங்கி 34 நாட்கள் ஆன நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று தனது நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.
"அடுத்த 2 முதல் 3 வாரங்களுக்கு ஈரானை மிகவும் கடுமையாகத் தாக்கப் போகிறோம். எங்களது இலக்குகளை நாங்கள் நெருங்கிவிட்டோம். இந்தப் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவோம்." ஹார்முஸ் ஜலசந்தியை மீட்கவும், சர்வதேசக் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாக்கவும் மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா உதவும் என அவர் உறுதியளித்தார்.
டிரம்ப்பின் உரைக்குச் சில மணி நேரங்களிலேயே ஈரான் ராணுவம் தனது அதிகாரப்பூர்வப் பதிலடியைத் தந்துள்ளது. ஈரானின் ராணுவத் திறனை அமெரிக்காவும், இஸ்ரேலும் குறைத்து மதிப்பிட்டுவிட்டன. இதற்காக அவர்கள் பேரழிவுகரமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
அமெரிக்கா அவமானப்பட்டு, உலக அரங்கில் இழிவடைந்து, தானாக முன்வந்து சரணடையும் வரை இந்தப் போர் தொடரும் என ஈரான் ராணுவம் சூளுரைத்துள்ளது. அணு ஆயுதத் தயாரிப்பு என்ற பொய்க் குற்றச்சாட்டை முன்வைத்துத் தங்களைத் தாக்குவதை ஒருபோதும் ஏற்க முடியாது என ஈரான் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.
ஈரான் தற்போது ஹார்முஸ் ஜலசந்தியைத் தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதனால் உலக நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச அளவில் விண்ணைத் தொட்டுள்ளது. இது அமெரிக்காவிற்குப் பெரும் பொருளாதார நெருக்கடியைக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வார்த்தைப் போர் உண்மையான அணு ஆயுதப் போராக மாறுமோ என்ற அச்சம் ஐநா சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடையே எழுந்துள்ளது. ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஈரானுக்கு ஆதரவாகத் திரும்ப வாய்ப்புள்ளதால், இது மூன்றாம் உலகப்போருக்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.