“எனக்கு குழந்தைகளின் நலன் தான் முக்கியம்...” ORS மோசடியை அம்பலப்படுத்திய டாக்டர் சிவராஞ்சனி திடீர் ராஜினாமா!
குறிப்பிட்ட சில பானங்கள் 'ORS' (Oral Rehydration Solution) என்ற பெயரில் தவறாக விற்பனை செய்யப்படுவதை 8 ஆண்டுகளாகத் தொடர்ந்து எதிர்த்து வந்த மருத்துவர் சிவராஞ்சனி சந்தோஷ், இந்திய குழந்தை நல மருத்துவக் கழகத்தின் (IAP) செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சந்தையில் விற்கப்படும் சில எலக்ட்ரோலைட் பானங்களில் (உதாரணமாக ORSL மற்றும் அதன் புதிய வடிவமான ERZL) உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைப்படி இருக்க வேண்டிய சர்க்கரை மற்றும் உப்பின் அளவு சரியாக இல்லை என்று சிவராஞ்சனி குற்றம் சாட்டினார். அதிக சர்க்கரை கலந்த இத்தகைய பானங்களை வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளுக்கு வழங்கும்போது, அது நீரிழப்பை அதிகப்படுத்தி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என அவர் ஆதாரங்களுடன் விளக்கினார்.
அவரது போராட்டத்தின் விளைவாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் FSSAI அமைப்பு, மருத்துவத் தரம் இல்லாத பானங்களுக்கு 'ORS' என்ற பெயரையும் சின்னத்தையும் பயன்படுத்தத் தடை விதித்தது. இவரது போராட்டத்தால் பாதிக்கப்பட்ட சில பெரிய மருந்து நிறுவனங்கள் சிவராஞ்சனிக்கு எதிராக அவதூறு வழக்கு மற்றும் சட்ட நோட்டீஸ்களை அனுப்பின. இக்கட்டான இந்தச் சூழலில், 47,000 உறுப்பினர்களைக் கொண்ட IAP அமைப்பு தனக்குத் துணையாக நிற்கவில்லை என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
மருந்து நிறுவனங்களின் நிதியுதவி மற்றும் ஸ்பான்சர்ஷிப் காரணமாகவே IAP தலைமை மௌனம் காப்பதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். “இனி இந்த நச்சுத்தன்மை கொண்ட சூழலில் என்னால் இருக்க முடியாது. எனக்கு குழந்தைகளே முக்கியம்” எனக் கூறி தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.
சிவராஞ்சனியின் இந்தத் துணிச்சலான முடிவிற்கு நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு இளம் மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மருத்துவ அறத்தை விட கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபமே முக்கியம் எனக் கருதும் அமைப்புகளுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.