"தமிழ்நாட்டையே வெட்கப்பட வெச்சிருச்சு!" - முதல்வர் விழாவில் ஏஐ குளறுபடி.. “இதுதான் பிரதமருக்கும் உங்களுக்குமான வித்தியாசம்” - வானதி சீனிவாசன் அதிரடி தாக்கு!

 

சென்னை எழும்பூரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்த பெண்களுக்கான சிறப்புப் பாதுகாப்புத் திட்ட விழாவில், ஒளிபரப்பப்பட்ட ஏஐ காணொளியில் கடுமையான தமிழ் எழுத்துப் பிழைகள் இடம்பெற்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைக் குறிப்பிட்டு, "இது தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது" என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் தவெக அரசை மிகக் காட்டமாகத் தாக்கியுள்ளார்.

சென்னை எழும்பூர் இராஜரத்தினம் அரங்கத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், பெண்களின் பாதுகாப்பை மாநில அளவில் மேம்படுத்தும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ள 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' திட்டத்தை முதலமைச்சர் விஜய் முறைப்படி தொடங்கி வைத்தார். விழாவில், இந்த அதிரடிப்படையின் புதிய இலச்சினையை வெளியிட்ட முதல்வர், அவர்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அதிநவீன வாகனத்தையும் கொடியசைத்து அறிமுகப்படுத்தி, அதனை அவரே நேரில் இயக்கியும் பார்த்தார். பெண்களின் பாதுகாப்புக்கான இந்த மெகா திட்டத்திற்காக முதற்கட்டமாக ரூ.354 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், மாநிலம் முழுவதும் 2,545 புதிய காவலர் பணியிடங்களை உருவாக்கவும் முதல்வர் விஜய் ஆணை பிறப்பித்துள்ளார்.

இன்று முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் தொடங்கி வைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட ஏஐ காணொளியில் இடம்பெற்றிருந்த தமிழ் வார்த்தைப் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளன.

பெண்கள் பாதுகாப்பை முன்னிறுத்தும் முக்கிய நிகழ்ச்சியில் தமிழ் மொழிக்கு உரிய… pic.twitter.com/DOCmdU4tRt

— Vanathi Srinivasan (@VanathiBJP) June 9, 2026


திட்டம் என்னவோ பிரம்மாண்டமாகத் தொடங்கப்பட்டாலும், விழா மேடையில் ஒளிபரப்பப்பட்ட அறிமுக வீடியோ தான் தவெக அரசுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் அவசர அவசரமாகத் தயாரிக்கப்பட்டிருந்த அந்த அதிகாரப்பூர்வக் காணொளியில், தமிழ்நாடு அரசின் இலச்சினை  சிதைந்தும், ஆங்காங்கே மிக மோசமான தமிழ் எழுத்துப் பிழைகளுடனும் சொற்கள் இடம்பெற்றிருந்தன. இதைக் கவனித்த தமிழ் ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் சமூக வலைத்தளங்களில் அரசின் அலட்சியத்தைப் விமர்சிக்கத் தொடங்கினர்.

இந்த விவகாரம் குறித்துப் பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில் தவெக அரசைத் துவம்சம் செய்துள்ளார். "முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட ஏஐ காணொளியில் இடம்பெற்றிருந்த தமிழ் வார்த்தைப் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளன. பெண்கள் பாதுகாப்பை முன்னிறுத்தும் முக்கிய நிகழ்ச்சியில் தமிழ் மொழிக்கு உரிய மரியாதை வழங்கப்படாதது கண்டனத்திற்குரியது.

தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் காலத்தில், ஒரு சில நிமிட ஏஐ காணொளியைக் கூட சரியான தமிழில் தயாரிக்க முடியாத நிலை அரசுத் துறைகளின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது. இந்த வீடியோ ஒளிபரப்பப்படுவதற்கு முன் உயர் அதிகாரிகள் யாரும் இதனைப் பரிசீலிக்கவில்லையா? அல்லது பிழைகள் தெரிந்தும் அலட்சியமாக வெளியிடப்பட்டதா? பிரதமர் நரேந்திர மோடி உலக அரங்கில் தமிழ் மொழியின் பெருமையையும், தமிழர் பண்பாட்டையும் எடுத்துரைத்து வரும் வேளையில், தமிழ்நாட்டில் தாய்மொழியிலான ஒரு சிறு காணொளியைக் கூட முறையாக உருவாக்கத் தவறியது வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது" என்று அவர் அதில் கொதித்துள்ளார்.

நேற்று தான் பாதிக்கப்பட்ட பெண் விவகாரத்தில் துண்டுச்சீட்டில் அறிக்கை தாக்கல் செய்ததற்காக நெல்லை மருத்துவக் கல்லூரி டீனுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சம்மன் அனுப்பி, தவெக அரசின் பெண்கள் பாதுகாப்பு முழக்கத்தைக் காட்டமாக விமர்சித்திருந்தது. அந்தச் சூடு தணிவதற்குள், முதலமைச்சர் விஜய் கலந்துகொண்ட அரசு விழாவிலேயே தமிழ் மொழிப் பிழைகளுடன் ஏஐ வீடியோ வெளியாகிப் பாஜகவின் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது, கோட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்குளறுபடிக்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.