கடைக்குள் புகுந்து பெண்ணுக்குக் கத்திக்குத்து... கணவருடன் மீண்டும் சேர்ந்ததால் ஆத்திரம்!

 

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே திருமணமான பெண்ணுடன் ஏற்பட்ட நட்பைத் தொடர வற்புறுத்தி, அவர் பணிபுரியும் கடைக்கே சென்று சரமாரியாகக் கத்தியால் குத்திய நிதி நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாளவாடியைச் சேர்ந்த அஞ்சு என்பவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்த அவர், குடும்பத் தேவைக்காகக் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் நாகேந்திரன் (28) என்பவருடன் அஞ்சுவுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர்க் கணவருடன் சமாதானம் ஏற்பட்டதால், அஞ்சு மீண்டும் தன் கணவருடன் சேர்ந்து வாழத் தொடங்கியுள்ளார். இதனால் நாகேந்திரனுடனான நட்பை அவர் முற்றிலும் துண்டித்துள்ளார். அஞ்சு தன்னுடன் பேசுவதைத் தவிர்த்ததால் ஆத்திரமடைந்த நாகேந்திரன், அவர் பணிபுரியும் பேன்சி ஸ்டோருக்குள் புகுந்து பேசும்படி வற்புறுத்தி வாக்குவாதம் செய்துள்ளார். அஞ்சு மறுத்ததால், மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைச் சரமாரியாகக் குத்தியுள்ளார். கடையில் இருந்த சக ஊழியர் உடனடியாகத் தலையிட்டு நாகேந்திரனைத் தடுத்து நிறுத்தியதால் அஞ்சு பெரும் அசம்பாவிதத்திலிருந்து தப்பினார்.

படுகாயமடைந்த அஞ்சு மீட்கப்பட்டுத் தாளவாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். காவல்துறை தன்னைக் கைது செய்ய வருவதை அறிந்த நாகேந்திரன், விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதால் அவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தாளவாடி காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.